காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: தந்தை உள்பட 10 பேர் சிக்கினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: தந்தை உள்பட 10 பேர் சிக்கினர்

கரூர்: புதுகை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் மனிதநேயம்(26). திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த அதிமுக பிரமுகர்  செல்வம்.

இவரது மகள் சுவேதா(22). இருவரும் கடந்த 20 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தை ஏற்காத பெண்ணின் தந்தை மதுரை ஐகோர்ட் கிளையில் தனது மகளை காணவில்லை என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது கோர்ட்டில் ஆஜரான சுவேதா, காதல் கணவர் மனிதநேயத்துடன் செல்வதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

அவர் கணவருடன் செல்ல கோர்ட் அனுமதி அளித்தது.

சுவேதாவும், மனிதநேயமும் பஸ்சில் புதுக்கோட்டை புறப்பட்டனர். பஸ் மதுரை அடு்த்த மேலூர் அருகே வந்தபோது பின்தொடர்ந்து கார் மற்றும் வேனில் வந்த சுவேதாவின் தந்தை செல்வமும் மற்றும் 10 பேர் கொண்ட கும்பலும் பஸ்சை மறித்து சுவேதாவை மட்டும் வலுக்கட்டாயமாக கீழே இறக்கி காரில் ஏற்றி கடத்தி சென்றுவிட்டனர்.

அதிர்ச்சியடைந்த மனிதநேயம் மேலூர் போலீசில் புகார் அளித்தார். சுவேதாவை கடத்திச் சென்ற காரும், வேனும் கரூர் நோக்கிச் செல்வதாக தகவல் கிடைத்தது. போலீசார் கரூர் ராயனூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் அடைத்து வைத்திருந்த சுவேதாவை மீட்டு,  அவரை கடத்திய தந்தை செல்வம் உள்பட 10 பேரையும் பிடித்து வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவேதாவை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

.

மூலக்கதை