இன்று காலை 7.47 மணிக்கு வீடுகள் குலுங்கின சேலம், தர்மபுரியில் திடீர் நிலஅதிர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று காலை 7.47 மணிக்கு வீடுகள் குலுங்கின சேலம், தர்மபுரியில் திடீர் நிலஅதிர்வு

சேலம்: சேலம், தர்மபுரி மாவட்டங்களில் இன்று காலை 7. 47 மணிக்கு திடீரென பூமி குலுங்கி, நில அதிர்வு ஏற்பட்டது. 5 வினாடிகள் நீடித்த நில அதிர்வினால், வீடுகளில் இருந்த மக்கள் சாலைக்கு ஓடி வந்தனர்.

தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர். தமிழகத்தின் மேற்கு மாவட்ட ஆரம்ப பகுதியாக சேலம் மாவட்டம் விளங்குகிறது.

மலைகள் சூழ்ந்து காணப்படும் சேலம், தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 7. 47 மணிக்கு திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது. 5 வினாடிகள் வரை நீடித்த இந்த நில அதிர்வினால், வீடுகளும், உயர்ந்த கட்டிடங்களும் குலுங்கின.

இதனால் மக்கள் வீதிக்கு ஓடி வந்தனர். சேலம் டவுன், பழைய பேருந்துநிலையம், 4 ரோடு, திருவா கவுண்டனூர், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கோரிமேடு, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி என மாநகர் முழுவதும் சரியாக 7. 47 மணிக்கு இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர்.

கோட்டை பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் மக்கள் தெருவுக்கு வந்தனர்.

இதேபோல், கோரிமேடு, கன்னங்குறிச்சி, திருவாகவுண்டனூர், கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சாலைக்கு வந்தனர்.

சேலம் மாவட்ட பகுதியை பொறுத்தளவில், ஓமலூர், காடையாம் பட்டி, கருப்பூர், டேனீஷ்பேட்டை, ஆட்டையாம்பட்டி, வாழப் பாடி, தாரமங்கலம், மல்லூர், மேட்டூர் பகுதியில் மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர். அங்கும், மக்கள் பீதியில் வீதிக்கு வந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி, கம்பைநல்லூர், பெரும்பாலை, ஏரியூர், நாகமறை, சின்னம்பள்ளி, பழையூர் மற்றும் மாவட்டத்தில் பல இடங்களில் சில நிமிடங்கள் நிலஅதிர்வு ஏற்பட்டது. கம்பைநல்லூரில் மாணவர் விடுதியில் தூங்கி கொண்டிருந்த மாணவர்கள், நிலஅதிர்வால் தரையில் விழுந்தனர்.

பொம்மிடி பகுதியில் வீட்டில் இருந்த பாத்திரங்கள் அதிர்வடைந்து கீழே விழுந்தன. இதனால் பொதுமக்கள் தெருவுக்கு ஓடி வந்தனர்.

சுமார் 3 வினாடிகள் வரை நில அதிர்வை உணரமுடிந்ததாக மக்கள் கூறினர். சேலம், தர்மபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, வானிலை ஆய்வு மையங்களில் பதிவாகியுள்ளது.
 
தமிழகத்தில் சென்னை, சேலம், கொடைக்கானல் ஆகிய 3 இடங்களில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் கருவிகள் உள்ளன.

இதில் தற்போது சேலம் கலெக்டர் அலுவலகம் மற்றும் கொடைக்கானலில் உள்ள கருவிகள் பழுதாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தில் உள்ள கருவியில், நில அதிர்வின் ரிக்டர் அளவு பதிவாகியிருக்கிறது என சேலம் வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலஅதிர்வு குறித்து டெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மைய தலைமையிடத்திற்கு சேலம் மாவட்ட வானிலை மைய ஆய்வாளர் மாரிமுத்து தகவல் தெரிவித்தார்.   இதையடுத்து அங்கு சீஸ்மோகிராப் கருவியில் ஆய்வு செய்த அதிகாரிகள், ரிக்டர் அளவு அறிவிப்பை வெளியிட்டனர். அதில், சேலம், தர்மபுரி மாவட்ட பகுதியில் இன்று காலை 7. 47 மணி 13 விநாடியில், 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.

அது, ரிக்டர் அளவில் 3. 3 ஆக பதிவாகி இருப்பதாக  தெரிவித்துள்ளனர்.

கருவி பழுது: தமிழகத்தில் சேலம், சென்னை, கொடைக்கானல் ஆகிய 3 இடங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. சேலத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் வானிலை ஆய்வு மையத்தில் இக்கருவி இருக்கிறது.

உலகில் எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்த கருவியில் பதிவாகும். ஆனால், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் சேலம் சீஸ்மோகிராப் கருவி பழுதாகியுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 12ம் தேதி டெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகத்திற்கு இங்குள்ள அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

கருவி பழுது தொடர்பாக தனியாக கடிதமும் அனுப்பியிருக்கிறார்.

 ஆனால், இதுநாள் வரை அதை சரிசெய்ய வானிலை ஆய்வு மையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், கொடைக்கானலில் உள்ள சீஸ்மோகிராப் கருவியும் பழுதடைந்த நிலையில் இருக்கிறது.

இதன் காரணமாக சேலத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்வின் ரிக்டர் அளவை உடனடியாக கணக்கிட முடியாமல் வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் தவித்தனர்.

மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்க முடியாமல், வருவாய்த்துறை அதிகாரிகளும் திணறினர்.

.

மூலக்கதை