லாரி ஸ்டிரைக்கால் மூலப்பொருள் வரத்து குறைந்தது : ஜவுளி, இன்ஜினியரிங் தொழில்கள் பாதிப்பு

தினகரன்  தினகரன்
லாரி ஸ்டிரைக்கால் மூலப்பொருள் வரத்து குறைந்தது : ஜவுளி, இன்ஜினியரிங் தொழில்கள் பாதிப்பு

கோவை: லாரி ஸ்டிரைக்கால் வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து ஜவுளி மற்றும் இன்ஜினியரிங் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருள்கள் வரத்து குறைந்து விட்டது. இதனால் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி தொழில்கள் பாதித்துள்ளது. அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது. அதை முன்னிட்டு கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் சரக்குகளுக்கான புக்கிங் கடந்த 16ம் தேதி நிறுத்தப்பட்டது. இது தவிர ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, சென்னை செல்லும் சரக்குகளுக்கான புக்கிங் 18ம் தேதி முதலும், கேரளா மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்கு செல்லும் லாரிகள் 19ம் தேதி முதல் புக்கிங் நிறுத்தப்பட்டது. இதனால் கோவையில் இருந்து பம்ப்செட், கிரைண்டர், பவுண்டரி உள்ளிட்ட இன்ஜினியரிங் பொருள்கள், விசைத்தறி துணி, தேயிலைத்தூள் மற்றும் தென்னை நார் பொருள்கள், காய்கறிகள் ஆகியவையும், திருப்பூரில் இருந்து உள்நாட்டிற்கு தேவையான பின்னலாடைகளும், இரு மாவட்டத்தில் இருந்து விசைத்தறி துணி, நூல், கொப்பரை ஆகியவையும், ஈரோட்டில் இருந்து வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள், மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவையும் வட மற்றும் தென் மாநிலங்களுக்கு செல்லவில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் தினசரி ரூ.150 கோடி, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி, ஈரோடு மாவட்டத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்து, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய மீன், பாக்கு, தேங்காய், மற்றும் கொச்சின் துறைமுகத்தில் இருந்து வரக்கூடிய விவசாய உரங்கள், ஆயில், பஞ்சு, கெமிக்கல் உள்ளிட்ட பொருள்கள் நேற்று வரவில்லை. வட மாநிலத்தில் இருந்து கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி மற்றும் இன்ஜினியரிங் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் நேற்று வரவில்லை. இதனால் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் கலியபெருமாள் கூறுகையில், ‘ஸ்டிரைக்கில் இருந்து தண்ணீர், பால், மருத்துவ பொருட்கள் மற்றும் ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் மட்டும் ஓடுகிறது. இதர பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் ஓடவில்லை’ என்றார். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் 8 ஆயிரம் லாரிகள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்ததால் ஜவுளி, பிராய்லர் கோழி, நூல், கொப்பரை,தேங்காய் எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.1000 கோடி வர்த்தகம் பாதித்து உள்ளதாக லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மூலக்கதை