புது ரூ.100 ரூபாய் நோட்டுக்காக ஏடிஎம்மை மாற்றியமைக்க ரூ.100 கோடி செலவு..!

தினகரன்  தினகரன்
புது ரூ.100 ரூபாய் நோட்டுக்காக ஏடிஎம்மை மாற்றியமைக்க ரூ.100 கோடி செலவு..!

புதுடெல்லி: புது நூறு ரூபாய் நோட்டுக்காக ஏடிஎம்களில் மாற்றம் செய்வதற்கு ₹100 கோடி செலவாகும் எனவும், இந்த பணிகள் முடிய ஓராண்டு ஆகும் எனவும் ஏடிஎம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.புதிதாக 100 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. ஊதா நிறத்தில் இருக்கும் இந்த நோட்டு, 66 மி.மீ x 142 மி.மீ என்ற அளவில் தயாரிக்கப்பட உள்ளது. இது தற்போது புழக்கத்தில் உள்ள நூறு ரூபாய் நோட்டை விட சிறியது. பழைய நூறு ரூபாய் அளவு 157 மி.மீ. x 73 மி.மீ அளவில் உள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட புதிய ரூ.500, ரூ.2,000, ரூ.200, ரூ.50 நோட்டு அனைத்தும் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டை விட சிறிய அளவிலேயே இருந்தன. இவற்றுக்கு ஏற்ப ஏடிஎம்களை மாற்றி அமைக்க நீண்ட காலம் ஆனது. இந்நிலையில், புதிய நூறு ரூபாய்க்காக ஏடிஎம்களை மாற்றி அமைப்பது குறித்து, ஏடிஎம் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏற்கெனவே ரூ.200 நோட்டுக்காக ஏடிஎம்களை மாற்றி அமைக்கும் பணி இன்னும் முடியவில்லை. இதற்கிடையில் புதிய ரூ.100 நோட்டு வர உள்ளது. இதற்காக நாடு முழுவதும் சுமார் 2.4 லட்சம் ஏடிஎம்களை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு மட்டும் ரூ.100 கோடி செலவாகும். இதுமட்டுமின்றி, ஏற்கெனவே உள்ள 100 ரூபாய் நோட்டையும் ஏடிஎம்மில் வைக்க வேண்டும் என்பதால், இந்த பணி மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும். அனைத்து பணிகளையும் முடிக்க 12 மாதமாகும் என்றார்.

மூலக்கதை