இலவச வீட்டுமனை விற்று 'பிசினஸ்'; மோசடி தடுக்க அரசு புது அறிவிப்பு!

தினமலர்  தினமலர்
இலவச வீட்டுமனை விற்று பிசினஸ்; மோசடி தடுக்க அரசு புது அறிவிப்பு!

கோவை : உலகில் சிலர் எப்படியெல்லாம் ஏமாற்றி, பிழைப்பு நடத்துகின்றனர் பாருங்கள்! அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும், காலி வீட்டுமனை பட்டா பெறுபவர்கள், அதை வேறு நபருக்கு அதிக விலைக்கு விற்று, அரசை ஏமாற்றும் வேலை நடக்கிறது. இதை தடுக்க, ஆதார் அட்டை, தனிநபர் போட்டோ, குடும்ப போட்டோ, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று, வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு வருவாய்த்துறையின் கீழ், வருவாயில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது. அரசு வகுத்துக் கொடுத்துள்ள நெறிமுறைகளின் கீழ், நகர்ப்பகுதியாக இருந்தால், ஒன்று அல்லது ஒன்றரை சென்ட் இடம், ஊரகப் பகுதிக்கு, இரண்டு அல்லது இரண்டரை சென்ட், கிராமப்பகுதியாக இருந்தால் மூன்று சென்ட், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது.

வீட்டுமனைப்பட்டா வழங்கிய நாளிலிருந்து, வருவாய்த்துறை வழங்கிய இடத்தில், இரண்டாண்டுக்குள் வீட்டுக்கான கட்டுமானப்பணிகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.அவ்வாறு மேற்கொள்ளாத பட்சத்தில், அந்த இடத்தை ஆய்வு செய்து, ஏற்கனவே வழங்கிய பட்டாவை ரத்து செய்வதோடு, அதை வேறு நபருக்கு வழங்கி உத்தரவு பிறப்பிப்பர். இந்நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

செம பிசினஸ்!
இச்சூழலில், தமிழக அரசு வருவாய்த்துறையில் வழங்கப்படும், காலிவீட்டு மனைப்பட்டா உத்தரவு வழங்குவதற்கு, பல வகைகளில் லஞ்சம் கைமாறுவதும், இதற்காக பலரும், லட்சக்கணக்கில் செலவு செய்வதும் தெரியவந்துள்ளது. அதில் ஒரே நபர், பல இடங்களில் காலி வீட்டுமனைப்பட்டா பெறுவதும், அதை பல லட்சம் ரூபாய்க்கு வேறு நபருக்கு விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதற்கு 'செக்' வைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கண்டுபிடிப்பது எப்படி?
வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஒரு தாலுகாவில் வசிக்கும் ஒருநபர், வீடு இல்லாமல் பல ஆண்டுகளாக, வருவாய்த்துறைக்கு சொந்தமான ஒரு இடத்தில் வசிப்பதாகவும் மனைவி, குழந்தைகள் இருப்பதாகவும், வசிப்பிடம் சொந்தமாக இல்லாததால், கஷ்டப்படுவதாகவும் கூறுவார். அதனால் தனக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க கோரிக்கை விடுப்பார்.

சிலர் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவல், உண்மையாக இருக்காது. அந்நபரின் 'பான்' எண், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை, 'ஆன்லைன்' வாயிலாக பரிசோதித்தால், அவர் இதே போல் வெவ்வேறு தாலுகாக்களில், காலி வீட்டுமனைப்பட்டா பெற்றிருப்பார்; அவர் பெயரிலோ அல்லது மனைவி பெயரிலோ, பசுமைவீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டியிருக்கலாம்.

அல்லது அரசு வழங்கும், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை பெற்றிருக்கலாம் அல்லது அரசின் வேறு ஏதாவது நிதி திட்டத்தின் கீழ் பயனடைந்திருக்கலாம். அதை கண்டறியவே, பான் எண் மற்றும் ஆதார் எண் கேட்டுப் பெறுகிறோம். வாக்காளர் அடையாள அட்டையை பெற்று, அவர் அந்த முகவரியில் எத்தனை தேர்தலில் வாக்களித்திருக்கிறார் என்பதையும் சோதனை செய்கிறோம். அதன் பின்பே, காலி வீட்டு மனை இடம் வழங்குவது குறித்து, முடிவு செய்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எப்படியெல்லாம் யோசிக்கறாங்க!
வருவாயில் பின்தங்கிய ஏழை மக்களுக்கு, தாலுகா விட்டு தாலுகாவுக்கு இடம் பெயர்ந்து, காலிமனைப்பட்டா பெற, முதற்கட்டமாக ஒரு தாலுகாவில் காலிமனையிட பட்டா பெற்றுக்கொண்டு, அருகே உள்ள தாலுகாவுக்கு, குடும்ப அட்டையை மாற்றுகின்றனர். அதன் பின், அந்த முகவரிக்கு அருகே இருக்கும் இடத்துக்கு, காலிமனையிட பட்டாவுக்கான ஆவணங்களை தயார் செய்து, விண்ணப்பித்து பெற்றுக்கொள்கின்றனர். ஆவணங்கள் மட்டுமே இடம்மாறி இருக்கும். ஆனால் பட்டா பெறுபவர் முதலில் பட்டா பெற்ற இடத்தில் தான் வசிப்பார். இதற்கு வழி சொல்லி மாற்றித்தரும் பணியில், சில லோக்கல் அரசியல்வாதிகளின் பங்கு முக்கியமானது.

மூலக்கதை