இதுவா? ரோடு...! தரமற்ற பணியால் மக்கள் அதிருப்தி; முறைகேட்டை கண்டறிய வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
இதுவா? ரோடு...! தரமற்ற பணியால் மக்கள் அதிருப்தி; முறைகேட்டை கண்டறிய வலியுறுத்தல்

அவிநாசி : அவிநாசி அருகே முதலிபாளையத்தில, தரம் குறைந்த ரோடு அமைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அவிநாசி அருகே கூட்டப்பள்ளி - குன்னத்துார் ரோட்டில், உள்ளூர் மற்றும் கோபி, நம்பியூர் உட்பட பல இடங்களில் இருந்தும் வாகனங்கள் செல்கின்றன. ஆனால், இந்த ரோடு, படுமோசமாக இருந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் கிராம சாலை பிரிவு சார்பில், குன்னத்துார் நால்ரோடு துவங்கி, பஞ்சலிங்கம்பாளையம் இடைப்பட்ட, 3 கி.மீ., துார ரோடு, 2 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த ரோட்டுக்கு இடையே, 9 இடங்களில், சிறிய அளவிலான மழை நீர் செல்ல கால்வாய் (கல்வெர்ட்) அமைக்கப்படுகிறது. இதில், மழைக்காலத்தில், பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முதலிபாளையம் ஏ.டி., காலனியில், மழைநீர் கால்வாய் இணைப்பு சந்திக்கும் இடத்தில், சிமென்ட் குழாய் பதிக்கபப்பட்டிருந்தது. இதில், லாரிகள் உட்பட கனகர வாகனங்கள் சென்றதால், குழாய் உடைந்து, ரோடு பழுதானது.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது; முதலிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, வடுகம்பாளையம் மேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் மழைநீர், முதலிபாளையத்தில் உள்ள வீடுகளை சூழ்ந்து கொள்கிறது. இதனால், பாலம் அமைக்குமாறு வலியுறுத்தினோம். ஆனால், சிமென்ட் குழாய்களை பயன்படுத்தி, 'கல்வெர்ட்' அமைக்கின்றனர். இந்தப்பணிக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, துாக்கி எறிந்த பழைய குழாய்களை, பயன்படுத்துகின்றனர். பலமிழந்த குழாய் என்பதால், வாகனங்களின் அதிர்வில் உடைந்து, சாலை கீழிறங்கி விட்டது.

மக்களின் வரிப்பணத்தில், மக்களுக்கு வளர்ச்சிப்பணிகள் செய்யப்படுகின்றன. அதிலும், தரமற்ற பணிகளில், பணம் முறைகேடு செய்யப்படுகிறது. இது விஷயத்தில், கலெக்டர் தலையிட்டு, தரமற்ற பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர், துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, அனைவரிடமும் ஆலோ சித்து, போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பாதிப்பில்லையாம்?
இந்த விவகாரம் குறித்து, நெடுஞ்சாலைத் துறை கிராம சாலைகள் உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''முதலிபாளையம் ஏ.டி., காலனியில், மழைநீர் வழிந்தோட வசதியாக கால்வாய் (கல்வெர்ட்) அமைக்கப்படுகிறது. ''ஏற்கனவே, அங்கு பயன்படுத்தப்பட்ட நல்ல நிலையில் உள்ள சிமென்ட் குழாயை தான், கால்வாய் அமைக்க பயன்படுத்துகிறோம். இதனால், ரோட்டுக்கு பாதிப்பில்லை,'' என்று கூறி, சமாளித்தார்.

மூலக்கதை