6 பாஸ்போர்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு : பெல்ஜியத்தில் பதுங்கலா?

தினகரன்  தினகரன்
6 பாஸ்போர்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு : பெல்ஜியத்தில் பதுங்கலா?

புதுடெல்லி: வைர வியாபாரி நீரவ் மோடி 6 பாஸ்போர்ட் வைத்திருந்ததாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் பெல்ஜியத்தில்  பதுங்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13000 கோடி கடன் மோசடி செய்து வெளிநாடு தப்பிவிட்டார்.  அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர சிபிஐ, அமலாக்கத்துறை கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நீரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு, அவரது இருப்பிடத்தை அறிய இன்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது.இதற்கிடையே, நீரவ் மோடி தற்போது பெல்ஜியத்தில் பதுங்கியிருப்பதாக இந்திய உளவு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும், அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட பிறகும், நீரவ் மோடி பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அது குறித்து நடத்தப்பட்ட  விசாரணையில், நீரவ் மோடி மொத்தம் 6 இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்ததை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.அதில் 2 பாஸ்போர்ட்கள் செயல்பாட்டில் இருந்தன. மற்ற 4 பாஸ்போர்ட் பயன்பாட்டில் இல்லை. ஒரு பாஸ்போர்ட்டில் தனது முழு பெயரை  குறிப்பிட்டுள்ள நீரவ் மோடி, மற்றொன்றில் முதல்பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளார். முதல் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது பாஸ்போர்ட் மூலம் பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளார். அந்த பாஸ்போர்ட்டில் 40 மாத  இங்கிலாந்து நாட்டு விசாவும் பெற்றிருக்கிறார். அந்த பாஸ்போர்ட்டும் பின்னர் இந்திய அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டு விட்டது.இதைத்தொடர்ந்து 6 பாஸ்போர்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புலனாய்வு அமைப்புகள் புதிய வழக்கை தற்போது பதிவு செய்திருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலக்கதை