நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கோவை மாவட்டத்தில் 12 இடங்களில் செக்போஸ்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கோவை மாவட்டத்தில் 12 இடங்களில் செக்போஸ்ட்

கோவை: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட வவ்வால் எச்சம், சிறுநீர் மற்றும் அவை சாப்பிட்ட பழங்களை சாப்பிடுவதால் பன்றிகள், நாய், ஆடு உள்ளிட்ட விலங்கிற்கும், மனிதர்களுக்கும் நோய் பரவுகிறது.

இதற்கு உரிய சிகிச்சை இல்லை என கூறப்படுகிறது. தமிழகத்தில் நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து பழக்கழிவுகள், நோயாளிகளை தமிழகத்திற்குள் கொண்டுவருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில், ஆனைகட்டி, வாளையார், வேலந்தாவளம், மீனாட்சிபுரம், வடகாடு உள்ளிட்ட 12 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கால்நடை பராமரிப்பு துறையினர் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்பு குழு அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்படும் இறைச்சி, கால்நடைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இந்த வைரஸ் பன்றிகளை தாக்கும் என்பதால் பன்றி பண்ணைகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கோவனூரில் நான்கு பன்றி பண்ணைகள் உள்ளன. வெள்ளமடை உள்ளிட்ட பகுதிகளிலும் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.

கோவையில் 2 ஆயிரத்து 76 பன்றிகள், பொள்ளாச்சியில் 1,872 பன்றிகள் என மொத்தம் 3,948 பன்றிகள் உள்ளன. இந்த பன்றிகளின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

நோய் பாதிக்கப்பட்ட பன்றிகளை தனியாக வைக்கவும், உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.

மூலக்கதை