நேரு பூங்கா-சென்ட்ரல், சின்னமலை-டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நேரு பூங்காசென்ட்ரல், சின்னமலைடி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: நேரு பூங்கா-சென்ட்ரல் மற்றும் சின்னமலை-டி. எம். எஸ் வழித்தடத்தில் புதிய மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் பழனிசாமி, மத்திய இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.   சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கி மலையில் இருந்து நேரு பூங்கா வரையிலும், விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வரையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு நேரு பூங்கா முதல் சென்ட்ரல் இடையிலான 2. 5 கி. மீ வழித்தடத்திலும், சின்னமலையில் இருந்து டிஎம்எஸ் வரையிலான 4. 5 கி. மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகளானது கடந்த 4 நான்கு மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த வழித்தடத்தில் பணிகளை சீக்கிரம் முடிக்கும் பொருட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் சிறு, சிறு பணிகள் காரணமாக சேவையை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் பணிகள் கடந்த மாதம் முடிக்கப்பட்டதை அடுத்து சோதனை ஓட்டங்கள் நடத்தி பார்க்கப்பட்டது.

இந்த இரண்டு சுரங்கபாதை வழித்தடத்திலும் கடந்த 14, 15 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு நடத்தினார்.

அப்போது பாதுகாப்பு அம்சங்கள், தண்டவாளத்தின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இதையடுத்து இந்த இரண்டு வழித்தடங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கு பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் கிடைத்தது. இந்நிலையில், நேரு பூங்கா-சென்ட்ரல் மற்றும் ன்னமலை-டி. எம். எஸ்(தேனாம்பேட்டை) சுரங்கபாதை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை  எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல்வர்  பழனிசாமி மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் கொடி அசைத்து சேவையை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சட்டபேரவை தலைவர் தனபால், அமைச்சர்கள் ஜெயகுமார், எம். சி. சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இரண்டு சுரங்கபாதை வழித்தடங்களும் திறக்கப்படுவதால் விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு, நேரு பூங்கா வழியாக சென்ட்ரல் வரையும், கிண்டி, சின்னமலை வழியாக தேனாம்பேட்டை, டி. எம். எஸ் வரையும் மெட்ரோ ரயில் சேவையானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீட்டிக்கப்படும்.



இதேபோல், மற்ற ரயில் நிலையங்களில் உள்ளதை போன்று ஸ்மார்ட் கார்டு திட்டமும் இதில் உள்ளது. இதில் 10 சதவிகித கட்டண சலுகையில் பொதுமக்கள் வாங்கி பயணம் செய்யலாம்.

கட்டண நிர்ணயம்விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக எழும்பூருக்கு ரூ. 60, விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் நிலையத்திற்கு ரூ. 70ம், அதேபோல், விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வழியாக தேனாம்பேட்டைக்கு ரூ. 40ம், விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வழியாக டி. எம். எஸ்க்கு ரூ. 50ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: ஏற்கனவே, ஒரு நாளைக்கு மெட்ரோ ரயிலில் 20 ஆயிரம் பேர் வரையில் பயணம் செய்து வருகிறார்கள்.

நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் இந்த இரண்டு சுரங்கபாதை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

எனவே, தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


.

மூலக்கதை