வீட்டு சிலிண்டர்கள் ஓட்டலுக்கு சப்ளை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீட்டு சிலிண்டர்கள் ஓட்டலுக்கு சப்ளை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆவடி: சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், ஆவடி, கோவில்பதாகை, பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், பூந்தமல்லி, போரூர், புழல் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களின் 50க்கும் மேற்பட்ட தனியார் காஸ் ஏஜென்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த காஸ் ஏஜென்சிகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிலிண்டர் பதிவு செய்ததும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தங்கள் ஏெஜன்சி ஊழியர்கள் மூலம் காஸ் சப்ளை செய்து வருகின்றன. ‘வீட்டு சிலிண்டர்களை ஓட்டல் உள்ளிட்ட உணவு கடைகளுக்கு சப்ளை செய்யக்கூடாது’ என்ற விதியின்கீழ், அவர்களுக்கு தனியே அதிக விலையுள்ள பெரிய சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுகின்றன.

ஆனால் இந்த விதிமுறைகளை மீறி தற்போது வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை ஓட்டல்கள், தள்ளுவண்டி டிபன் கடைகள், டீக்கடைகள், பாஸ்ட்புட் உணவகம், பிரியாணி கடைகளுக்கு சம்பந்தப்பட்ட தனியார் காஸ் ஏஜென்சி ஊழியர்கள் அதிகளவில் விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மக்கள் கூறுகையில், ‘வீட்டு  உபயோக சிலிண்டரைவிட, கடைகளுக்கு பயன்படுத்தும் கமர்சியல் சிலிண்டரின் விலை இருமடங்கு அதிகம்.

இதனால் கடைகளுக்கு வீட்டு உபயோக சிலிண்டர்களை சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வாங்கிக்கொண்டு ஏஜென்சி ஊழியர்கள் சப்ளை செய்கின்றனர். குறிப்பிட்ட காஸ் சிலிண்டர் கிடைக்காமல் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம்.

இந்த முறைகேட்டை சம்பந்தப்பட்ட காஸ் ஏஜென்சிகளும் கண்டுகொள்வதில்லை. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் முறைகேட்டை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடும் காஸ் ஏஜென்சி மற்றும் அதன் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அந்த ஏஜென்சியின் லைசென்சையும் ரத்து செய்ய வேண்டும்’ என்றனர்.

.

மூலக்கதை