செக்சன்-17 நிலத்தின் ஆக்கிரமிப்புகள்...அதிரடி அகற்றம்! மரங்கள் பறிமுதல்; வழக்கு பதிவு

தினமலர்  தினமலர்

பந்தலுார்:பந்தலுார் அருகே, பிதர்காடு பகுதியில் செக்சன்-17 நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன; வெட்டப்பட்ட மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட முக்கட்டி பகுதியில், செக்சன்-17க்கு உட்பட்ட நிலத்தில், கோர்ட் உத்தரவு மீறப்பட்டு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதுடன், கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படங்களுடன், செய்தி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறையினர், வனச்சரகர் மனோகரன் தலைமையிலான வனக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது ஆக்கிரமித்து விவசாயம் செய்ததுடன், கட்டடங்களும் கட்டப்பட்டிருந்ததும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதும் தெரியவந்தது.இந்நிலையில், வனத்துறை குழுவினர் நேற்று காலை ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றினர். வனஅலுவலர் உத்தரவையடுத்து, வெட்டப்பட்ட மரங்களில் கடத்தியது போது, மீதமிருந்த மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன.மேலும், தமிழ்நாடு தனியார் துறை காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், செக்சன்-17 நிலத்தின் உரிமையாளர் சுபேர், மரக்கடத்தலில் ஈடுபட்ட சவுகத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்;இதுபோன்ற வனக்குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.சுற்றுச்சூழல் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில்,'கூடலுாரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள வன அலுவலர் நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டு, இந்த செயலுக்கு காரணமான, வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், கீழ்மட்ட ஊழியர்கள் பாதிக்காத வகையில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்களை கட்டுப்படுத்த இயலும். இதே கோரிக்கையை வலியுறுத்தி, முதன்மை வனப்பாதுகாவலருக்கும் மனு அனுப்பட்டுள்ளது,' என்றனர்.

மூலக்கதை