லஞ்சம் தராமல் எதுவும் கிடைப்பதில்லை...இ-(இடைத்தரகர்) சேவை மையங்கள்! புரோக்கர்கள்-அதிகாரிகள் பகிரங்க கூட்டணி!

தினமலர்  தினமலர்
லஞ்சம் தராமல் எதுவும் கிடைப்பதில்லை...இ(இடைத்தரகர்) சேவை மையங்கள்! புரோக்கர்கள்அதிகாரிகள் பகிரங்க கூட்டணி!

மாவட்டத்திலுள்ள, அனைத்து இ - சேவை மையங்களும், புரோக்கர்களின் கூடாரங்களாக மாறியுள்ளன; லஞ்சம் தராமல், தனி நபர் யாரும், எந்த சான்றிதழையும் வாங்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.கோவை கலெக்டர் அலுவலகம் உட்பட, கோவை மாவட்டம் முழுக்க, மொத்தம் 119 இ - சேவை மையங்கள் உள்ளன. கேபிள் 'டிவி' மற்றும் எல்காட், கூட்டுறவுத்துறை வாயிலாக இவை செயல்படுகின்றன. இந்த மையங்களில், ஜாதி, இருப்பிடம், வாரிசு உள்ளிட்ட, 67 வகையான சான்றிதழ்களை, 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பித்து பெறலாம். இ-சேவை மையத்தில், ஒரு சான்றிதழ் பெற, 60 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது.
ஒரு சான்றிதழை பெற வேண்டுமென்றால், காலை 10:00 மணிக்கு இ-சேவை மையம் திறப்பதற்கு முன்னதாக, சென்று டோக்கன் பெற வேண்டும். முதல், 30 டோக்கன்களுக்கு மட்டுமே ஒரு நாள் முழுக்க சேவை வழங்கப்படும். டோக்கன் இல்லாதவர்கள், இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும், இ - சேவை மைய பணியாளர்கள், 30 டோக்கன்களில், 15 பேருக்கு மட்டும் சான்றிதழ் பெறுவதற்கு, விண்ணப்பிப்பர்.மீதமுள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தை குறிப்பிட்டோ அல்லது வேறு ஆவணங்களை எடுத்துவரச்சொல்லியோ திரும்ப அனுப்பி வைத்துவிடுவர். அவர்களுக்கு பதிலாக, புரோக்கர்கள் கொடுக்கும் சான்றிதழ்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிப்பர். புரோக்கர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களுக்கே முன்னுரிமை கொடுப்பர். அதனால், பெரும்பாலான மக்கள், நேரடியாக இ - சேவை மையங்களுக்கு செல்லாமல், புரோக்கர்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் புரோக்கர்கள், சான்றிதழ் ஒன்றுக்கு, 500 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை லஞ்சமாக பெறுகின்றனர். இதில் பாதித்தொகையை இ - சேவை மைய பணியாளர்களுக்கு வழங்குகின்றனர். அதனால், புரோக்கர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. நேரடியாக மக்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள், ஏதாவது ஒரு காரணம் சொல்லி நிராகரிக்கப்படுகின்றன.
கோவை, கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்தில் இயங்கும் இ - சேவை மையத்தில், கடந்த 17ம் தேதி விண்ணப்பிக்கச் சென்ற கோவை சிங்காநல்லுாரை சேர்ந்த, சுமதி, 38, வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வந்திருந்தார். 'சர்வர் ' பிரச்னை என்ற காரணத்தை சொல்லி, புரோக்கர்கள் வாயிலாக விண்ணப்பிக்க இ - சேவை பணியாளர்கள் அறிவுறுத்தினர்.
அதே நாளில், சின்னியம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலசுப்ரமணியன், தனது குழந்தைகளுக்கு கல்வி உதவி பெறவும், சுங்கத்தை சேர்ந்த மலர்க்கொடி, குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் பெறவும் வந்திருந்தனர். இவர்களையும் புரோக்கரை சந்திக்கும் படி இ - சேவை மையப் பணியாளர்கள் அறிவுறுத்தினர்.அவர்கள் கோபமடைந்து, கலெக்டரிடம் புகார் கொடுக்கச் சென்றனர். தொடர்கதையாக நீடிக்கும் இந்த லஞ்ச வேட்டைக்கு, கலெக்டர் அதிரடியாக முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்.
அனுப்பினார் சுற்றறிக்கை!
இது குறித்து கலெக்டர் ஹரிஹரனிடம் கேட்டபோது, ''கோவையிலுள்ள இ - சேவை மையங்களை கண்காணிக்க சம்மந்தப்பட்ட தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்படும். மக்கள் சேவையில் ஈடுபடாமல், புரோக்கர்களுக்கு ஆதரவாக செயல்படும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். சொன்னதைப் போலவே, இ - சேவை மையங்களில் புரோக்கர்களைத் தவிர்த்து, மக்களுக்கு சேவையாற்றுமாறு இ - சேவை மையங்களுக்கு சுற்றறிக்கையும் கலெக்டர் அனுப்பி வைத்துள்ளார்.--நமது நிருபர்-

மூலக்கதை