காட்சிப்பொருளாக மண்புழு உரம் உற்பத்தி திட்டம் அரசின் நிதி வீணடிப்பு; விவசாயிகள் அதிருப்தி

தினமலர்  தினமலர்
காட்சிப்பொருளாக மண்புழு உரம் உற்பத்தி திட்டம் அரசின் நிதி வீணடிப்பு; விவசாயிகள் அதிருப்தி

உடுமலை:குடிமங்கலத்தில், மண்புழு உரம் உற்பத்திக்காக கொட்டகை அமைக்கப்பட்டதுடன், திட்டத்தை மறந்துவிட்டதால் அரசின் நிதி வீணடிக்கப் பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மத்திய அரசின், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் மூலம், கடந்தாண்டு ஊராட்சிகளில் மண்புழு உரம் உற்பத்தி மேற்கொள்ளும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உரக்கொட்டகை அமைக்கப்பட்டது.
அதன்படி, குடிமங்கலம் ஒன்றியத்திலும், 23 ஊராட்சிகளிலும் மண்புழு உர உற்பத்தி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், முதற்கட்டமாக சோமவாரபட்டி, கோட்டமங்கலம், குடிமங்கலம், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தலா, 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உரக்கொட்டகை அமைக்கப்பட்டது.திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தில், வீடுகளிலிருந்து சேகரித்துவரப்படும் கழிவுகளிலிருந்து மக்கும் கழிவுகளை தரம் பிரித்து, அதனை பயன்படுத்தி இயற்கை உரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதில், கோட்டமங்கலத்தில் மட்டும் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், மற்ற பகுதிகளில் கட்டடங்கள் மட்டும் அமைக்கப்பட்டதுடன் திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.இதனால், பல லட்சம் ரூபாய் அரசின் நிதி வீணடிக்கப்பட்டதாக, கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், மற்ற ஊராட்சிகளில் இயற்கை உரக்கொட்டகை கூட அமைக்கப்படாத நிலை காணப்படுகிறது.
பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம், ஒன்றிய அதிகாரிகளின் அலட்சியத்தால் உபயோகமில்லாமல் பயனற்று போயுள்ளது.


இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரிப்பு
விவசாயத்தில், இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகம் மண்புழு உர உற்பத்தியில் ஈடுபட்டு, முறையாக விற்பனை செய்தால் ஊராட்சிக்கு வருவாய் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் குறைந்த விலையில் இயற்கை உரம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.இதனால், காட்சிப்பொருளாக இருக்கும் இயற்கை உர கொட்டகைகளில் மண்புழு உரம் உற்பத்தியை மேற்கொள்ளவும், அனைத்து ஊராட்சிகளிலும் இயற்கை உரக்கொட்டகை அமைத்து, இயற்கை உரங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தவும், விவசாயிகள் மற்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை