கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெற கூட்டம்

தினமலர்  தினமலர்

மதுரை;மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களிடம் இந்தாண்டு கலை, அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர். கல்லுாரிகளில் விண்ணப்பங்கள் பெற மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவில் 800 மதிப்பெண் மற்றும் அதற்கும் குறைவாக 60 சதவீதம் மாணவர்கள் பெற்றுள்ளனர். பொறியியல் கல்லுாரிகளில் சேர கணிதப் பிரிவு மாணவரில் விரும்பிய கல்லுாரி, பாடப் பிரிவு கிடைக்காதபட்சத்தில், 50 சதவீதம் பேர் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் இக்கல்லுாரிகளில் விண்ணப்பங்கள் பெற மாணவர் கூட்டம் அதிகரிக்கிறது. சில கல்லுாரிகளில் கடந்தாண்டில் போட்டி அதிகம் ஏற்பட்ட பாடப் பிரிவிற்கு அதிகபட்சம் 500 விண்ணப்பம் வினியோகிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக பி.காம்., ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், அனிமேஷன், விஸ்காம், பேங்கிங் அன்ட் இன்சூரன்ஸ், நெட்வொர்கிங், மற்றும் பொருளியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்டு 41 கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இதில் 14 தன்னாட்சி பெற்றவை. ஒரு கல்லுாரி குறைந்தபட்சம் 10 முதல் 25 பாடப் பிரிவை கொண்டுள்ளன. தலா ஒரு பாடப் பிரிவிற்கு 40 இடம் ஒதுக்கீடு அனுமதி பெற்றிருந்தாலும் குறைந்தபட்சம் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் கலை, அறிவியல் பிரிவில் உள்ளன. பிளஸ் 2வில் மதுரையில் மட்டும் 800 மதிப்பெண்ணிற்கு கீழ் பெற்ற மாணவர் 33 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் கலை அறிவியல் கல்லுாரிகளை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது, என்றார்.

மூலக்கதை