காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் தரைத்தளம் சேதம்:பணி மேற்கொள்ளாமல் நகராட்சி அடம்

தினமலர்  தினமலர்
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் தரைத்தளம் சேதம்:பணி மேற்கொள்ளாமல் நகராட்சி அடம்

காரைக்குடி:காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை பணிகளை மேற்கொள்ளாமல் நகராட்சி தொடர்ந்து மவுனமாக இருப்பதால் பஸ் ஸ்டாண்ட் பொலிவிழந்து வருகிறது.
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் 400க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. உள்ளே வந்து செல்லும் பஸ்களுக்கு நகராட்சி சார்பில் குறிப்பிட்ட அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வசதிகள் மட்டும் செய்யப்படவில்லை.பஸ் நுழைவு பகுதியில் உள்ள தரைதளம் மற்றும் ஆம்னி பஸ்கள் நிற்கும் பகுதி தரை தளம் உடைந்து சேதமடைந்துள்ளது. உதிரி பாக பற்றாக்குறையால் தத்தளிக்கும் அரசு பஸ்கள் மேலும் சேதத்துக்குள்ளாகிறது. 2-வது பிளாட்பாரத்தில் பஸ் வெளி வரும் பகுதியில் உள்ள பள்ளம் நீண்ட நாட்களாக சரி செய்யப்படவில்லை.
பிளாட்பாரத்தில் ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகளால் பயணிகள் அமரவோ, நிற்கவோ இடமின்றி தவிக்கின்றனர். போதிய மின் விளக்கு இல்லாததால், இரவில் மது அருந்தும் பாராகவும், பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகவும் பஸ் ஸ்டாண்ட் உள்ளது.பாதாள சாக்கடை பணியை காரணமாக சொல்லி,கடந்த ஐந்து ஆண்டுக்கும் மேலாக நகராட்சி சார்பில் எந்த ரோடு பணியும் மேற்கொள்ளவில்லை. குப்பை சேகரித்தல், தெருவிளக்கு என ஒன்றிரண்டு பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் நகராட்சி, மக்களின் அடிப்படை தேவையாக உள்ள பிற பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூலக்கதை