கிராமங்களில் மின்வினியோகம் பாதிப்பு:சாதனங்கள் பழுதால் மக்கள் தவிப்பு

தினமலர்  தினமலர்

செம்பட்டி:செம்பட்டி, வண்ணம்பட்டியைச் சுற்றியுள்ள குக்கிராமங்களுக்கான மின்வினியோகத்தில், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மின் சாதனங்கள் பழுதடைந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, கோடை கால மின்தடை பிரச்னை எழுந்தது. பின் அது தவிர்க்கப்பட்டு தற்போது, மீண்டும் முன்னறிவிப்பின்றி மின்தடை அமல்படுத்தப்படுகிறது.முக்கிய பகுதிகளில் சில நிமிடங்களும், குக்கிராமங்களில் அதிகபட்ச நேரத்திற்கு மின்தடையும் தொடர்கிறது. செம்பட்டி, ஆத்துார், சின்னாளபட்டி பகுதிகளில், அவ்வப்போது 20 முதல் 40 நிமிடங்கள் வரை மின்தடை செய்யப்படுகிறது.வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, குட்டத்துப்பட்டி, மைலாப்பூர், நாச்சக்கோணான்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், அவ்வப்போது பகலில் 5 மணிநேரம், மாலையில் ஒரு மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. விவசாயத்திற்கான மின்வினியோக நேரமும், சில பகுதிகளில் 3 மணி நேரமாக குறைந்துள்ளது.முன்னறிவிப்பின்றி வழங்கப்படும் சீரற்ற, குறைந்தழுத்த மின்வினியோகத்தால் வீட்டு உபயோக சாதனங்கள் பழுதாவது தொடர்கிறது. மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மதுரை பகிர்மான பிரிவு ஆலோசனைக்கு ஏற்ப, மின்தடை செய்யப்படுகிறது. விரைவில் அனைத்து 'பீடர்'களிலும், பாகுபாடற்ற முறையில் மின்தடை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

மூலக்கதை