4 ஆண்டில் புதிய உச்சம் கச்சா எண்ணெய் 75 டாலரை தாண்டியது

தினகரன்  தினகரன்

லண்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நான்கு ஆண்டில் முதல் முறையாக 75 டாலரை தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்புக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. தினசரி விலை நிர்ணயம் செய்ய தொடங்கியதில் இருந்து, பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் இதற்கு காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு, விலையை குறைக்க பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என நிதி அமைச்சகமும் கைவிரித்து விட்டது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 75 டாலரை தாண்டியுள்ளது. அதாவது தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்துள்ள பிரண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் நேற்று 75.27 டாலருக்கு வர்த்தகம் ஆகியுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிந்திருந்தபோது அதை மீட்கும் வகையில் உற்பத்தி குறைப்பு முடிவை ஒபெக் நாடுகள் எடுத்தன. இதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய விலை கடந்த 2014 நவம்பருக்கு பிறகு உச்சபட்ச விலையாக கருதப்படுகிறது. ஒபெக் நாடுகள் கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் இருப்பு அளவை கணிசமாக குறைத்துள்ளன. இந்த ஆண்டு இறுதியில்தான் உற்பத்தி அதிகரிப்பு பற்றி முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது. சவூதி அரேபியாவில் ஒபெக் நாடுகள் எடுத்த முடிவின்படி, கச்சா எண்ணெய் விலை பேரல் 80 டாலர் முதல் 100 டாலர் வரை எட்டலாம் என்ற கணிப்புகளும் வந்துள்ளன. சவூதி அரேபியா செயற்கையான விலையேற்றத்தை உருவாக்குவதாக டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மூலக்கதை