களை கட்டுகிறது மாம்பழம் சீசன் பெங்களூரா, குண்டு வரத்து அதிகரிப்பு

தினகரன்  தினகரன்

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் களை கட்டியுள்ள நிலையில், சேலம் பெங்களூரா, குண்டு வகை மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் மாம்பழ சீசன், தற்போது களை கட்டியுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் விற்பனைக்காக சேலம் மார்க்கெட்டில் டன் கணக்கில் மாம்பழங்கள் குவிக்கப்படுகிறது. நடப்பாண்டில் இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து மாம்பழ வரத்து தொடங்கியுள்ளது. தினமும் 40 டன் வருகிறது. இதில், சுவை மிகுந்த மல்கோவா, சேலம் பெங்களூரா, இமாம்பசந்த், குண்டு, அல்போன்சா, நடுசாலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகை மாம்பழங்கள் சேலம் கடைவீதியில் இருக்கும் பழ மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு, வைக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கிலோ 150 முதல் 180 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட மல்கோவா 120 முதல் 150க்கும்,  180க்கு விற்கப்பட்ட சேலம் பெங்களூரா 120 முதல் 150க்கும், கிலோ 200க்கு விற்கப்பட்ட குண்டு ரகம் 120 முதல் 140 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. நெல்லை: மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளான செங்கோட்டை மற்றும் மேக்கரை, அச்சன்புதூர், வடகரை, புளியரை, வல்லம் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டுக்கான மா சீசன் தற்போது துவங்கியுள்ளது. 5 ஆண்டுகளாக வறட்சியால் மா மரங்களில் போதிய விளைச்சல் இல்லை. இந்த ஆண்டு ஓரளவு விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆயக்குடியில் மாங்காய் மற்றும் மாம்பழ விற்பனை துவங்கியுள்ளது. எனினும் வரத்து குறைவு காரணமாக நடப்பாண்டில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை