கூலி உயர்வு வழங்க தாமதிப்பதால் 'பவர்' காட்ட போராட்டம்! பவர்டேபிள் சங்கத்தினர் திட்டவட்டம்

தினமலர்  தினமலர்
கூலி உயர்வு வழங்க தாமதிப்பதால் பவர் காட்ட போராட்டம்! பவர்டேபிள் சங்கத்தினர் திட்டவட்டம்

திருப்பூர்:கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்தால், வேலை நிறுத்த போராட்டம்நடத்தப்படும் என, பவர்டேபிள் சங்கம் அறிவித்துள்ளது.
திருப்பூர் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு, பவர்டேபிள் நிறுவனங்கள், ஆடை தைத்து கொடுக்கின்றன. பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் - தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பவர்டேபிள் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன.அதன்படி, கடந்த 2016, ஜூனில், பவர்டேபிள் நிறுவனங்களுக்கு, 37 சதவீதம் கூலி உயர்வு வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் ஆண்டு 16 சதவீதம்; அடுத்த மூன்று ஆண்டுகள், ஒவ்வொரு ஆண்டும் ஏழு சதவீதம் என, இந்த கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கடந்த 2016ல், பவர்டேபிள் நிறுவனங்களுக்கு, ஆடை உற்பத்தி நிறுவனங்கள், 16 சதவீதம் கூலி உயர்வு வழங்கின. ஒப்பந்தப்படி, 2017 நவம்பர் மாதம் முதல், ஏழு சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், சில நிறுவனங்கள் மட்டுமே, பவர்டேபிள் கட்டணத்தை ஏழு சதவீதம் உயர்த்தி வழங்கு கின்றன. இதனால், ஒப்பந்தப்படி கூலி உயர்வு பெற்றுத்தர 'சைமா' சங்கத்துக்கு, பவர்டேபிள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இது குறித்து, 'சைமா' சங்கத்தினர், தங்கள் உறுப்பினர் நிறுவன பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. ஆயினும், பவர்டேபிள் கட்டணம் உயர்த்தி வழங்கவில்லை.கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பது, பவர்டேபிள் துறையினரை கவலை அடைய செய்துள்ளது. அனைத்து உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களும், ஒப்பந்தப்படி ஏழு சதவீதம் கூலி உயர்வு வழங்கவேண்டும்; கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களிடம் ஆர்டர் பெறுவது, ஆடை தயாரித்து கொடுக்கும் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என, உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு பவர்டேபிள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பவர்டேபிள் சங்க செயலாளர் நந்தகோபால் கூறியதாவது:சில உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஒப்பந்தப்படி 7 சதவீத கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடிக்கின்றன. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், எவ்வித பயனும் இல்லை. அதனால், கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களுக்கு, எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.நோட்டீஸ் வழங்கப்பட்டதையடுத்து, சில நிறுவனங்கள், கூலி உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளன. தொடர்ந்து காலதாமதம் செய்தால், கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களின், பவர்டேபிள் துறையினர் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை