பட்ஜெட்டில் கோவைக்கான வாக்குறுதிகள் புதுப்பிப்பு... நிதி ஒதுக்கீடு செய்யாமல் அப்பட்டமான புறக்கணிப்பு!

தினமலர்  தினமலர்
பட்ஜெட்டில் கோவைக்கான வாக்குறுதிகள் புதுப்பிப்பு... நிதி ஒதுக்கீடு செய்யாமல் அப்பட்டமான புறக்கணிப்பு!

அ.தி.மு.க., அரசின் ஏழாம் ஆண்டு பட்ஜெட்டிலும், கோவைக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., அரசின், ஏழாம் ஆண்டு பட்ஜெட், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலுக்கு 750 கோடி ரூபாய் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான விரிவான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏனெனில், இந்த பணி இன்னும் துவக்கப்படவில்லை என்பதோடு, இதற்காக இப்போது வரையிலும் ஒரு கோடி ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. இதே அ.தி.மு.க., ஆட்சியில், நான்காண்டுகளுக்கு முன்பு, ஜெ., முதல்வராக இருந்தபோது, 'கோவையில் மோனோ ரயில் திட்டம் நிறைவேற்றுவது தொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்படும்' என்று கூறி, அதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது, நினைவு கூறத்தக்கது. ஜெ.,மறைவுக்குப் பின்பே, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமென்று, தற்போதுள்ள முதல்வரால் அறிவிக்கப்பட்டது. அவ்வப்போது, அமைச்சர்களால் இந்த வாக்குறுதி, புதுப்பிக்கப்பட்டும் வருகிறது.

இதனால், இந்த பட்ஜெட்டில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு, ஏதாவது நிதி ஒதுக்கப்படும் என்று கோவை மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால், இப்போதும் இத்திட்டத்துக்கோ, பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும், விமான நிலைய விரிவாக்கத்துக்கோ, எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. அவிநாசி ரோடு மேம்பாலம், கலெக்டர்கள் மாநாட்டில் சமீபத்தில் முதல்வர் அறிவித்த மூன்று பாலங்கள் என, எதற்கும் நிதி ஒதுக்காமல், கோவையை அ.தி.மு.க., அரசு, அப்பட்டமாக புறக்கணித்துள்ளது; இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய அமைப்புகள், வரவேற்பு தெரிவித்திருப்பது தான், ஆச்சரிய முரண்பாடு.

எதிர்க்கட்சிகள் எங்கே?

கோவையில் உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி நடந்து வருவதாக, இதே சட்டசபையில் கடந்த ஆண்டே அறிவித்து, அதிர்ச்சி தந்த அரசு, இப்போது, மெட்ரோ ரயில் பணி ஆய்வு நடப்பதாகக் கூறி, அறிவிப்பு புரட்சி செய்துள்ளது. அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தாமல் இருப்பதற்காகவோ, சிலரது நலனுக்காக, பல லட்சம் மக்களுக்கு பயன் தர வேண்டிய பாலத்தின் வடிவமைப்பை, மாற்றியதற்காகவோ எந்த எதிர்க்கட்சியும் போராடவில்லை.

கோவை மாநகராட்சியில் குப்பை அள்ளுவது, சாலைகள் சீரமைப்பு, ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னை என பல விவகாரங்களிலும், ஊழல் கொடிகட்டிப் பறந்து வரும் நிலையிலும், அதை எதிர்த்து வாய் திறக்காமல் இருப்பது, எதிர்க்கட்சியினருக்கு மாதாந்திர மாமூல் போகிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.


-நமது நிருபர்-

மூலக்கதை