புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை... அலட்சியம்! ஆன்- லைன் நீக்கல் சான்ழிதழை ஏற்க மறுப்பு

தினமலர்  தினமலர்
புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை... அலட்சியம்! ஆன் லைன் நீக்கல் சான்ழிதழை ஏற்க மறுப்பு

தமிழக பகுதிகளில் வழங்கப்படும் ஆன்-லைன் பெயர் நீக்கல் சான்றிதழை, புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் ஏற்க மறுப்பதால், ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.தமிழக பகுதிகளில் இருந்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு குடி பெயர்பவர்கள், தமிழகத்தில், ரேஷன் கார்டுகளை ஒப்படைத்துவிட்டு, நீக்கல் சான்றிதழ் பெற்று வருவர். அதே போன்று, தமிழக பகுதிகளில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு திருமணமாகி வரும் பெண்களின் பெயரை, அங்குள்ள ரேஷன் கார்டில் நீக்கி விட்டு, சான்றிதழோடு விண்ணப்பம் செய்பவர்களுக்கு, புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.திருமணமாகி வரும் பெண்கள், தங்கள் பெயரை மட்டும் நீக்கம் செய்து மணமகன் குடும்ப ரேஷன் கார்டில் தங்களை பதிவு செய்துகொள்வர்.தமிழகத்தில் தற்போது குடிமைப்பொருள் வழங்கல்துறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஆன்-லைன் மூலம் நீக்கல், சேர்த்தல் பணிகள் நடக்கிறது.புதுச்சேரிக்கு குடிபெயர்வோர் தங்கள் ரேஷன் கார்டையோ அல்லது பெயரையோ ஆன் லைன் மூலம் நீக்கம் செய்து, அதற்கான சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்கின்றனர். இப்படி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் சான்றிதழை, புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் ஏற்க மறுத்து வருகின்றனர்.போலியாக, சான்றிதழ் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதால் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த சான்றிதழில், சான்றிதழ் வழங்கும் அதிகாரியின் கையொப்பம், முத்திரை இருக்க வேண்டும் என கூறி, அந்த விண்ணப்பத்தை ஏற்க மறுக்கின்றனர்.ஆனால், சம்மந்தப்பட்ட தமிழக பகுதி, தாசில்தார் அலுவலங்களில், அதுபோன்று, ஆன் லைன் சான்றிதழில் கையொப்பம் போட முடியாது. ஆன் லைனில் பார்த்து தெரிந்து கொள்ள கூறுங்கள் என, தெரிவித்து விடுகின்றனர். ஆனால், தொடர்ந்து வற்புறுத்தினால், ஒரு சில மாவட்டங்களில், தாசில்தார்கள் கையொப்பம் போட்டு கொடுத்து விடுகின்றனர். அப்படி, ஒரு சிலர் கொடுக்கும் தாசில்தார் கையொப்பமிட்ட சான்றிதழ்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு, புதியதாக விண்ணப்பம் செய்பவர்களை திருப்பி அனுப்பி, அலைகழித்து வருகின்றனர்.இதனால், ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்து வருபவர்கள், தங்களின் பெயரை, புதுச்சேரி ரேஷன் கார்டில் சேர்க்க முடியாமல், தவித்து வருகின்றனர். இது குறித்து, அமைச்சர் கந்தசாமி வரையில் பிரச்னை எடுத்து செல்லப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலர், இயக்குனர், அதிகாரிகளை அழைத்து அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த சான்றிதழை, சம்பந்தப்பட்டவர்களிடம் சுய கையொப்பமிட்ட உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு, அதிகாரிகள் ஏற்க வேண்டும். சந்தேகம் இருந்தால், அவர்களின் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தமிழக அரசு அலுவலகத்திற்கு அனுப்பி, 6 மாதத்திற்குள் சரிபார்ப்பது. போலி சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு கூட,தொடரலாம் என, முடிவெடுக்கப்பட்டது.அமைச்சர் கூறியும், இந்த நடமுறையை குடிமைப்பொருள் வழங்கல் துறையில் இதுவரை அமல்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், பெயர் நீக்கல், சேர்த்தலுக்காக பொதுமக்கள் நாள்தோறும் அலைகழிக்கப்படுவது தொடர்கிறது.எனவே, இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்த முதல்வர் மற்றும் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-நமது சிறப்பு நிருபர்-

மூலக்கதை