பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.   புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

7வது ஊதியக் குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீத நிவாரணம் வழங்க வேண்டும்.

மதிப்பு ஊதியம், தொகுப்பு ஊதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த செப்டம்பர் 8ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து 22ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த  ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதை தொடர்ந்து 80 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் அரசு சார்பில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால், இதற்கான பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கவில்லை. இதை தொடர்ந்து திட்டமிட்டப்படி இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் சுமார் 12 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன்பு பேராட்டம் நடந்தது.

சென்னையில் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



இந்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவில்லை. இதனால், சில பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் பள்ளிக்கு வந்த மாணவர்களும், ஆசிரியர் வராததால் வீடு திரும்பினர். தொகுப்பூதிய ஆசிரியர்கள், தற்காலிக பணியாளர்களை கொண்டு பள்ளிகளை இயக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனாலும், அவர்களும் பாடம் நடத்தாததால் மாணவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். அனைத்து பள்ளிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



இதே போன்று அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையில் தலைைம செயலகம், எழிலக வளாகம், கலெக்டர் அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் வராததால் அலுவல் பணிகள் முற்றிலுமாக முடங்கியது.

வருவாய்துறை, பத்திரபதிவு துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சான்றிதழுக்காக வந்த பொதுமக்கள் அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.   இந்த போராட்டத்திற்கு பிறகும் அரசு தங்களது கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



.

மூலக்கதை