22ல் ஜாக்டோ-ஜியோ ஸ்டிரைக் ஒட்டுமொத்த விடுப்பு விண்ணப்பம் 21ம் தேதி அளிக்கிறார்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
22ல் ஜாக்டோஜியோ ஸ்டிரைக் ஒட்டுமொத்த விடுப்பு விண்ணப்பம் 21ம் தேதி அளிக்கிறார்கள்

புதுக்கோட்டை: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய  பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.   ஊதிய முரண்பாடுகளை களைந்து 8வது  ஊதியக்குழு திருத்திய ஊதிய மாற்றத்தை அமுல்படுத்தவும், அதுவரை 1. 1. 2016  முதல் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும். சிறப்பு காலமுறை,  தொகுப்பு மற்றும் மதிப்பூதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம்  வழங்கப்பட வேண்டும் என்ற மூன்று அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணா விரதம் போராட்டத்தையும் நடத்தினர். ஆனால் அவர்களின் கோரிக்கை மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



மேலும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை அழைத்து பேசவில்லை. இதனால் வரும் 22ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக  ஜாக்டோ - ஜியோ அறிவித்து உள்ளது.   இதையடுத்து, அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 22ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு வசதியாக, விடுப்பு எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதற்கான விண்ணப்ப படிவம் ஒன்றை அவர்கள் தயார் செய்து  மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.



இன்று அல்லது 21ம் தேதி இந்த விண்ணப்பங்களை அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், உயர் அலுவலர்களிடம் அளிப்பார்கள்.   மேலும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நாளில் காலை 10 மணி அளவில் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர்கள் அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவார்கள் என  ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

.

மூலக்கதை