சிப்காட் தண்ணீரை மாசு கட்டுப்பாடு வாரியம்... ஆய்வு! ரசாயன பொருட்கள் கலந்ததால் நிறம் மாற்றமா?

தினமலர்  தினமலர்
சிப்காட் தண்ணீரை மாசு கட்டுப்பாடு வாரியம்... ஆய்வு! ரசாயன பொருட்கள் கலந்ததால் நிறம் மாற்றமா?

கடலுார் : கடலுார் முதுநகர் சிப்காட்டில் உள்ள தொழிற் சாலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகள் வெளியேறுவதால் நிலத்தடிநீர் மஞ்சளாக மாறி கால்நடைகள் கூட குடிக்க லாயக்கற்ற நிலை உள்ளதால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி வருகிறது.
கடலுார் முதுநகர் சிப்காட் கடந்த 1982ம் ஆண்டு துவக்கப்பட்டது. தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட ரசாயன தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. இதில் ஜே.கே.பார்மா, ஸ்பிக் பார்மா, ஏஷியன் பெயிண்ட்ஸ், டான்பேக் உட்பட 23 பெரிய கம்பெனிகளும், சிறிய கம்பெனிகளும் துவக்கப்பட்டன. புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக, உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விட இறக்குமதி செய்யப்படும் இதே பொருள் குறைவாக இருப்பதால் அனுமதிக்கப்பட்ட பல பெரிய கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்கின. தொடர்ந்து நஷ்டம் ஏற்படவே தொழிற்சாலையை இழுத்து மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இன்னும் சிலர் அனுமதிக்கப்பட்ட ரசாயனத்தை விட்டுவிட்டு அனுமதி இல்லாத ஆபத்தான ரசாயன பொருட்களை உற்பத்தி செய்வதாக புகார் எழுந்தது. இதன் விளைவாக ஸ்பிக் பார்மா, ஜே.கே., பார்மா உள்ளிட்ட பல பெரிய கம்பெனிகள் மூடப்பட்டன. மூடப்பட்ட ஸ்பிக் பார்மா அருகில் உள்ள ஈச்சங்காடு நீரோடையில் தற்போது மழை பெய்துள்ள நிலையில்ரசாயன கலவை கலந்துள்ளதால் தண்ணீர் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளது.

இதனால், கால்நடைகள் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அருகில் உள்ள ஈச்சங்காடு, குடிகாடு, சங்கொலிக்குப்பம், காரைக்காடு கிராமங்களில் துர்நாற்றமுள்ள காற்று வீசுவதோடு, நிலத்தடி நீரும் நஞ்சாக மாறிவிட்டது.இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்களுக்கு நுரையீரல் தொற்று காரணமாக சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்ற கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் ராமசுப்பு கூறுகையில், 'சிப்காட் வளாகத்தில் பல ரசாயன பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. தண்ணீரில் ரசாயன பொருட்கள் கலந்துள்ளதால் கலராக மாறியுள்ளது. மழைக்காலங்களில் இது போன்று நடப்பது சாதாரணமானது தான். தரைப்பகுதியில் காரை போன்று படிந்துள்ளது. இருப்பினும் ஓடையில் உள்ள தண்ணீரை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பிள்ளோம். ஆய்வில் சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய அளவில் ரசாயன பொருட்கள் கலந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மூலக்கதை