நூற்பாலைகளில் முன்கூட்டியே புக்கிங் செய்ததால் நூல் விலை 4% வரை அதிகரிப்பு

தினகரன்  தினகரன்

கோவை: உற்பத்தி செய்யப்போகும் நூல் ரகங்களுக்கும் முன்கூட்டியே புக்கிங் செய்ததால், நூல் விலை 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய ஜவுளிதொழில் கூட்டமைப்பு (டெக்ஸ்பிரனர்ஸ்) பொதுச்செயலாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:  ஜவுளி தொழிலில் நூல் மற்றும் துணி விற்பனை, நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி நடைமுறையால் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை தேக்கம் ஏற்பட்டது. தேவை குறைந்ததால், நூல் மற்றும் துணிக்கான உற்பத்தி விலைகூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் நஷ்டமடைந்த நூற்பாலைகள் 30 முதல் 40 சதவீதம் வரை உற்பத்தியை குறைத்தன.இந்நிலையில், தீபாவளிக்கு பின் இந்நிலை மாறியது. நூல் விற்பனை விறு விறுப்பாக துவங்கியது. கடந்த ஒரு மாதத்தில் பெரும்பாலான நூற்பாலைகளில் இருப்பில் இருந்த பின்னலாடை கார்டர்ட் ரகம், பின்னலாடை கோம்டு ரகம், வார்ப் கார்டர்ட் ரகம், பாலியெஸ்டர் காட்டன் ரகம் ஆகிய நூல் ரகங்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன. சில நூற்பாலைகளில் 3 முதல் 4 நாள் உற்பத்தி மட்டுமே கையிருப்பில் உள்ளது. ஜவுளி உற்பத்தி தொழில் விறு விறுப்படைந்துள்ளதால், நூல் தேவை அதிகரித்து கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், நூற்பாலைகளில் வரும் 15 நாளில் உற்பத்தி செய்யப்போகும் பெரும்பாலான நூல் ரகங்களையும் முன்கூட்டியே அட்வான்ஸ் புக்கிங் முறையில் விற்பனை செய்துள்ளனர். இதனால் பெரும்பாலான நூல் ரகங்களில் 2 முதல் 4 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. நூல் விற்பனையில் முன்னேற்றமும், விலை உயர்வும் வரும் 2018 மார்ச் வரை நீடிக்கும்.இவ்வாறு பிரபு தாமோதரன் கூறினார்.

மூலக்கதை