இறக்குமதி வரி உயர்வால் பாமாயில், சன்பிளவர் ஆயில் லிட்டருக்கு ரூ.12 வரை அதிகரிப்பு

தினகரன்  தினகரன்

சேலம்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சன்பிளவர் ஆயில்களுக்கு வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் இரு ஆயில்களும் லிட்டருக்கு ரூ.9 முதல் ரூ.12 விலை அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து பாமாயிலும், ரஷ்யா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து சன்பிளவர் ஆயிலும் இறக்குமதி செய்யப்படுகிறது. இது நாள் வரை பாமாயில் இறக்குமதி வரியாக லிட்டருக்கு 25 சதவீதமும், சன்பிளவர் ஆயிலுக்கு 12.5 சதவீதம் இருந்தது. இந்த நிலையில் 25 சதவீதம் இருந்த பாமாயில் இறக்குமதி வரியை 40 சதவீதமும், 12.5 சதவீதமாக இருந்த சன்பிளவர் ஆயிலின் வரியை 25 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வரியால் லிட்டர் ரூ.65 முதல் ரூ.70க்கு விற்ற பாமாயில், தற்போது லிட்டருக்கு ரூ.9 முதல் ரூ.10 விலை அதிகரித்துள்ளது. ரூ.80 முதல் ரூ.85க்கு விற்ற சன்பிளவர் ஆயில் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் சந்திரதாசன் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சன்பிளவர் ஆயில் போன்றவற்றின் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, இவற்றின் விலை லிட்டருக்கு ரூ.9 முதல் ரூ.12 வரை விலை அதிகரித்துள்ளது. தற்போது உள் நாட்டில் எள், நிலக்கடலை, கடுகு உள்ளிட்டவற்றின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் வரத்து அதிகரித்துள்ளது. இந்த வகை எண்ணெய்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும், மேலும் உள் நாட்டில் உள்ள விவசாயிகள், எண்ணெய் ஆலை உரிமையாளர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு, பாமாயில், சன்பிளவர் ஆயில் இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய்க்கும், பாமாயில், சன்பிளவர் ஆயிலுக்கும் இடையே ரூ.20 முதல் 40 வரை தான் லிட்டருக்கு வித்தியாசம் இருக்கிறது. பாமாயில், சன்பிளவர் ஆயில் விலையை உயர்த்தும் போது, உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்ற எண்ணெய் வகைகளின் வியாபாரம் அதிகரிக்கும். இவ்வாறு சந்திரதாசன் கூறினார்.

மூலக்கதை