வரியை மீண்டும் மாற்றியமைக்க திட்டம் பிரிட்ஜ், வாசிங்மெஷின் மலிவாக வாய்ப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: வீட்டு உபயோக பொருட்களுக்கான ஜிஎஸ்டி, அடுத்த முறை நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் குறைக்கப்படலாம் என தெரிகிறது. இதனால் பிரிட்ஜ், வாசிங்மெஷின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து அமலுக்கு வந்த பிறகு, மாநிலங்கள், தொழில்துறையினர் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 200க்கும் மேற்பட்ட பொருட்கள் விலை குறைக்கப்பட்டன. அதிலும் 28 சதவீதத்தில் இருந்த 177 பொருட்கள் குறைந்த வரி பிரிவுக்கு மாற்றப்பட்டன. தற்போது உச்சபட்ட ஜிஎஸ்டியான 28 சதவீதத்தில் 50 பொருட்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் குறைக்கப்படலாம் என தெரிகிறது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் மற்றும் சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறியதாவது: கடந்த முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தபோது, வீட்டு உபயோகத்துக்கான மின்னணு பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் மீதான வரி விதிப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை. 200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜிஸ்டி வரி 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் வரையிலான வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட்டது. சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் சந்தை சற்று மந்த நிலையிலேயே காணப்படுகிறது.  அதோடு வரி விதிப்புகளை மேலும் மாற்றியமைக்க வியாபாரிகள், தொழில்துறையினர் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பிலும் கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. தற்போதைக்கு வரி விதிப்பில் கூடுதல் மாற்றங்கள் இருக்காது என்று மத்திய அரசு கூறிவருகிறது. இருப்பினும், மேற்கண்ட வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், வாசிங்மெஷின் போன்றவை உச்சபட்ச அளவான 28 சதவீத வரி விதிப்புக்குள் வருகின்றன. எனவே விலை குறைக்கவும், சம்பந்தப்பட்ட தொழில் துறையினருக்கு ஊக்கம் அளித்திடவும் இனி வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் என்றனர்.

மூலக்கதை