'உணவு உற்பத்தி அதிகரிப்பு காலத்தின் கட்டாயம்'குன்னூர் கருத்தரங்கில் தகவல்

தினமலர்  தினமலர்

குன்னுார்;'தற்போதுள்ள உணவு உற்பத்தியை விட, 60 சதவீத உற்பத்தியை, வரும் 20 ஆண்டுகளில் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்' என, தெரிவிக்கப்பட்டது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், குன்னுார் ஜோசப் கான்வென்ட்டில் அறிவியல் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் லுார்துபவுலின் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட செயலாளர் ராஜு பேசியதாவது:
அடுத்த பத்து ஆண்டுகள் அறிவியல் யுகத்தின் புதிய அத்யாயம் துவங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நேனோ, உயிரியல், ஸ்டெம்செல் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. மொபைல் போன் தொழில்நுட்பத்தில், 70 வகையான உலோகங்கள் இடம் பெற்றுள்ளன. ஐந்தாம் தலைமுறை மொபைல் போன்களின் மூலம் அரசு நிர்வாகம் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவை செயல்பட போகின்றன. நோனோ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அழுக்கு பிடிக்காத துணி, ஒரு ஊசி முனையில் வைக்கும் இருநுாறு கோடி டிரான்சிஸ்டர்கள், முகத்தை என்றென்றும் பளிச்சென வைக்கும் முக கிரீம்கள், ஆயிரக்கணக்கான கி.மீ., துாரம் தொலைவிற்கு மின்சாரத்தை சேதமின்றி கடத்தும் நோனோ குழாய்கள் என தொழில்நுட்பம் அசுர வேகத்தில் பெருகி வருகிறது. தற்போது நோனோ தொழில் நுட்பத்தில் கொடி கட்டி பறக்கும் சீனா தான் வருங்காலத்தில் அறிவியல் தொழில்நுட்ப உலகை ஆளப்போகிறது.
ஒரு கைப்பிடி நோனோ துகள்களை பயன்படுத்தி நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க முடியும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புவி வெப்பத்தை கட்டுப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல உயிரியல் தொழில்நுட்பத்தில் ஏராளமான புதியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள உணவு உற்பத்தியை விட, 60 சதவீதம் உற்பத்தியை, அடுத்த 20 ஆண்டுகளில் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்கான முயற்சியில் நம் நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். நமது கல்வி முறையிலும் அறிவியலின் சவால்களை சந்திக்கும் வகையில் மாற்றங்களை போர்க்கால அடிப்படையில் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, ராஜு கூறினார்.ஆசிரியை ராதிகா வரவேற்றார். மேரிஜான் நன்றி கூறினார்.

மூலக்கதை