தேயிலை விலை விவகாரத்தால் தலைகீழ் மாற்றம் வருமா?வால்பாறை செல்கிறது நீலகிரி இலை

தினமலர்  தினமலர்

ஊட்டி;தரமான பசுந்தேயிலையை மட்டுமே பறித்து கொடுக்க வேண்டிய நிர்பந்த நிலை, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நீலகிரியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளால் நிராகரிக்கப்படும் பசுந்தேயிலை, வால்பாறையில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நீலகிரியில் சிறு, குறு தேயிலை விவசாயிகளால், தேயிலை துாள் உற்பத்திக்காக, தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் பசுந்தேயிலைக்கு, தேயிலை தொழிற்சாலைகள் வழங்க வேண்டிய குறைந்தபட்ச விலையை, மாதந்தோறும், தேயிலை வாரியம் நிர்ணயம் செய்கிறது; அதன்படி, மாதந்தோறும், 11 - 13 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால், இந்த விலையை கூட கொடுக்க முடியாத நிலையில், பல தொழிற்சாலைகள் உள்ளன. அவ்வாறு, தொழிற்சாலைகளால் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, விவசாயிகளுக்கு 'செட்டில்' செய்ய வேண்டும் என, தேயிலை வாரியம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
தொழிற்சாலைகள் 'செக்'ஆனால், தேயிலை துாளுக்கான ஏல விலை அடிப்படையில் தான், பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, தரமான தேயிலை துாளை உற்பத்தி செய்தால் மட்டுமே, ஏலத்தில் நல்ல விலை கிடைக்கிறது என, தேயிலை உற்பத்தியாளர்கள் கூறினர்.
இதனால், 'சிறு தேயிலை விவசாயிகள், இரு இலை, ஒரு கொழுந்து என்ற நிலையில் உள்ள தரமான பசுந்தேயிலையை மட்டுமே பறித்து தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும்' என, 90 சிறு தேயிலை தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது.அதன்படி, சில நாட்களாக, முதல் தர பசுந்தேயிலையை மட்டுமே, விவசாயிகளிடம் இருந்து தொழிற்சாலைகள் வாங்கி வருகின்றன.
ஆனால், பெரும்பாலான விவசாயிகள், பசுந்தேயிலையை பறிக்க ஆள்பற்றாக்குறை, பழக்கமின்மை போன்ற காரணங்களால், 'இரு இலை ஒரு கொழுந்து' என்ற அடிப்படையிலான முதல் தர இலைகளை தோட்டங்களில் இருந்து பறிக்க திணறுகின்றனர். இருப்பினும், 'தரமான பசுந்தேயிலையை மட்டுமே வாங்குவது' என்ற தங்களின் நிலைப்பாடில், தொழிற்சாலைகள் உறுதியாக உள்ளன.
முதல் தரம் இல்லாத பசுந்தேயிலையை வாங்க தொழிற்சாலைகள் மறுக்கின்றன. அவ்வாறு, நிராகரிக்கப்படும் பசுந்தேயிலை, டன் கணக்கில், வால்பாறையில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நீலகிரியில் விளையும் பசுந்தேயிலையை, வால்பாறை தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் தொழிலில், சிலர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விலை மட்டுமே நோக்கம்
நீலகிரி சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:இம்மாதம், பசுந்தேயிலைக்கு, கிலோவுக்கு, 12.50 ரூபாய் வழங்க வேண்டும் என, தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளது. ஏலத்தில், ஒரு கிலோ தேயிலை துாள், 80 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே, 12.50 ரூபாய் வழங்க முடியும். ஆனால், ஏலத்துக்கு வரும் பெருமளவு தேயிலை துாள், 80 ரூபாய்க்கு கீழ் தான் விற்கப்படுகிறது. இதனால், தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த விலையை, தொழிற்சாலைகளால் வழங்க முடிவதில்லை.
அதே நேரம், 'ஏ கிரேடு' எனப்படும், 'இரு இலை, ஒரு கொழுந்து' அடிப்படையிலான முதல் தர பசுந்தேயிலைக்கு, கிலோவுக்கு, 25 ரூபாய், 'பி பிளஸ்' கிரேடு பசுந்தேயிலைக்கு, கிலோவுக்கு, 17, 18 ரூபாய் விலை வழங்கப்படுகிறது. எனவே, தரமான பசுந்தேயிலை மூலம் மேற்கொள்ளப்படும் தேயிலை துாளுக்கு மட்டுமே நல்ல விலையை கொடுக்க முடியும் என்ற நிலை உள்ளதால், விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, ரமேஷ் கூறினார்.
தென் மண்டல தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசு கூறியதாவது:பசுந்தேயிலைக்கு, தேயிலை வாரியம் நிர்ணயம் செய்யும் விலையை, தொழிற்சாலைகள் வழங்க வேண்டும் என்ற உத்தரவு, நீலகிரி, வால்பாறை என, தென் மண்டலம் முழுமைக்கும் உள்ள தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் பொருந்தும்.
நீலகிரியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளால் நிராகரிக்கப்படும் பசுந்தேயிலையை, வால்பாறையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்புவதில் தவறில்லை; எங்களை பொறுத்தவரை, பசுந்தேயிலைக்கு, தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த விலையை தொழிற்சாலைகள் வழங்க வேண்டும் என்பது மட்டுமே.இவ்வாறு, பால்ராசு கூறினார்.
''நீலகிரியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளால் நிராகரிக்கப்படும் விவசாயிகளின் பசுந்தேயிலையை வால்பாறையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்புவதில் தவறில்லை. எங்களை பொறுத்தவரை, தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த விலையை தொழிற்சாலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்''- பால்ராசு,செயல் இயக்குனர், தேயிலை வாரியம்

மூலக்கதை