தரமற்ற, 'எம்.சாண்டால்' தடுமாறும் கட்டுமானத்துறை: மணலுக்கு தட்டுப்பாடு; மாற்றுக்கு தேவை கட்டுப்பாடு! நான்கு லட்சம் பேர் வேலை இழப்பால் பரிதவிப்பு

தினமலர்  தினமலர்
தரமற்ற, எம்.சாண்டால் தடுமாறும் கட்டுமானத்துறை: மணலுக்கு தட்டுப்பாடு; மாற்றுக்கு தேவை கட்டுப்பாடு! நான்கு லட்சம் பேர் வேலை இழப்பால் பரிதவிப்பு

கோவை:தமிழகத்தில், குறிப்பாக கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேல், ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதே நேரத்தில், ஆற்று மணலுக்கு மாற்றாகவுள்ள, 'எம்.சாண்டும்' தரமற்ற முறையில் இருப்பதால், கட்டுமானத்துறையினர் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
'தனியார் மணல் அள்ளத்தடை விதித்து, அரசு மணல் குவாரிகளில் மட்டுமே மணல் விற்பனை செய்யப்படும்' என்ற அரசின் உத்தரவால், தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவியது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 'காவிரி ஆற்றில் மணல் அள்ளக்கூடாது' என, உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதன் காரணமாக, கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில், காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளுவது முற்றிலும் தடைபட்டது. தட்டுப்பாடு அதிகரித்ததால், மணல் விலை, யூனிட் 18 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது.
கோவைக்கு தினமும், இரண்டரை யூனிட் மணல் கொள்ளளவு கொண்ட, 1,200 லோடுகள் தேவை. தீர்ப்புக்கு முன், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு காவிரி ஆற்றின் மணல் குவாரிகளில் இருந்து தினமும் 2,500 லோடு மணல் தரப்பட்டது.
தற்போது, அந்த மணல் வரத்து நின்றதால், தஞ்சை, கடலுார், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இருந்து, 250 லோடு மணல் கொண்டு வரப்படுகிறது. மணலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால், 70 சதவீத கட்டுமானப் பணிகள் கோவையில் தற்போது முடங்கியுள்ளன.
இதைச் சமாளிக்க ஆற்று மணலுக்கு மாற்று மணலாக, 'எம்.சாண்ட்' பயன்பாடு அதிகரித்தது. தமிழக அரசும் ஏற்கனவே, ஆறுகளைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீரைக் காக்கவும் 'எம்.சாண்ட்' பயன்பாட்டை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தது.
எம்.சாண்ட் நொறுக்கப்பட்ட கல், ஜல்லியில் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 120 எம்.சாண்ட் தயாரிப்பு குவாரிகள் உள்ளன. ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.4,000க்கு கிடைப்பதால் அதிகப்படியானோர் அதை வாங்க முன்வருகின்றனர். இப்படி எம்.சாண்டு தேவை அதிகரித்திருப்பதால், அதில் கிரசர்களின் துகள்கள் உள்ளிட்டவற்றை கலந்து தரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படுவதாக பரவலாக புகார்கள் எழுந்தது.
எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அரசு சார்பில், தமிழகத்திலுள்ள ஆயிரம் திரையரங்குகளில், நிலத்தடி நீரை பாதுகாக்க மாற்று மணலை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும்; தரமான எம்.சாண்ட் எது என்பதை ஆய்வு செய்தபின் பயன்படுத்த வேண்டும் எனவும் செய்திப்படங்களை திரையிட்டு வருகிறது.
மேலும், எம்.சாண்ட் தயாரிக்கும் ஆலைகள் உரிய தரப்பரிசோதனை சான்றிதழ் பெறவும் அரசு உத்தரவிட்டது. எனினும், கடந்த செப்., வரை தமிழகத்திலுள்ள, 120 எம்.சாண்ட் தயாரிப்பு குவாரிகளில், 10க்கும் குறைவானவையே இந்த சான்றிதழைப் பெற்றுள்ளன.எம்.சாண்ட் தரத்தை பரிசோதிக்க, சென்னை தரமணியில் உள்ள தேசிய தரப்பரிசோதனை ஆய்வகம், பொதுப்பணித்துறையின் மண் தன்மை ஆராய்ச்சி மையம், தமிழக அரசு கட்டட ஆராய்ச்சி நிலையம், கிண்டியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களின் ஆய்வகங்கள் மற்றும் பொறியியல் கல்லுாரி ஆய்வகங்களில் இந்தப் பரிசோதனைகளை செய்யலாம்.
இதற்குக் கட்டணமாக, சாதாரண ஆய்வுக்கு ரூ.2,000, விரிவான ஆய்வுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதனால், எம்.சாண்ட் வாங்குவோர் இந்த பரிசோதனையை செய்வதில்லை.ஆற்று மணலும் கிடைக்காமல், கிடைக்கும் மணலுக்கும் கடுமையாக விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் மாற்று மணலான எம்.சாண்டில், கிரசர்களின் துகள்களையும், துாசிகளையும் கலந்துவிடுவதால், கட்டட ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டுமானத்துறையினர் கடும் கவலை அடைந்திருக்கின்றனர்.
ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் செல்வராஜ் கூறுகையில், ''எம். சாண்ட் குவாரிகளை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் தான், ஆய்வு செய்ய வேண்டும். கட்டுமானத்துறை முடங்கியுள்ள நிலையில், மாற்று மணல் தரம் குறைந்திருப்பதால், தனியார் இதை வாங்க விரும்புவதில்லை. ''இதனால், கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன; நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர்.
''இந்நிலையில், அரசு கட்டுமானப் பணிகளில், இந்த தரமற்ற எம்.சாண்ட் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இது வரும் காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்,'' என்றார்.

தரத்துக்கு தொடருது தடை!
கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்ஸ் அசோஷியேஷன் நிறுவனத் தலைவர் ராகவன் (கொசிமா) கூறியதாவது:கோவை மாவட்டத்தில் 12 எம்.சாண்ட் குவாரிகள் இருக்கின்றன. 0.5 மி.மீ., முதல் 2 மி.மீ., அளவில் தயாரிக்கப்படும் எம்.சாண்ட் தான் தரமானது. ஆனால், 3 மி.மீ., வரை தயாரிக்கிறார்கள். அவ்வாறு தயாரித்தால், லோடு அதிகம் கிடைக்கும். சிலர், துாசுகளை அதிகளவில் கலந்து விடுகின்றனர்.தரமான எம்.சாண்ட் கேரளாவில் இருந்து வந்தது. அதையும் இங்குள்ள குவாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நிறுத்திவிட்டனர்.
தரமற்ற எம்.சாண்ட்டை பயன்படுத்தினால், கட்டடம், பாலம் எதுவாக இருந்தாலும் உறுதியாக இருக்காது. அரசு தான் உரிய வழிமுறைகளை வகுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவையில், 'எம்.சாண்ட்' தரம் குறித்து எங்களது அமைப்பு தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறது. அதனால் சமீபத்தில், தரமற்ற எம்.சாண்ட் கொண்டு சென்ற, 10 லாரிகளை கைப்பற்றி அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால், அதன் பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை