பசுந்தேயிலை முழுவதும் கொள்முதலுக்கு உட்கட்டமைப்பு மேம்பாடு அவசியம்! கரட்டு இலைகளை தவிர்க்க இதுவே வழி

தினமலர்  தினமலர்

மஞ்சூர்:'கூட்டுறவு தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை முழுவதையும் கொள்முதல் செய்ய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சூர் சுற்று வட்டாரத்தில் எட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. 15 ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக இருந்து கொண்டு தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை வினியோகிக்கின்றனர். நடப்பாண்டில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ததால், தேயிலை தோட்டங்களில் வழக்கத்தை விட பசுந்தேயிலை மகசூல் அதிகரித்தது. நடப்பாண்டில், செப்டம்பர் மாத நிலவரப்படி, 85 சதவீதம் பசுந்தேயிலை மகசூல் எட்டியது.
அவதியில் விவசாயிகள்
இந்நிலையில், வரத்து அதிகரிப்பை காரணம் காட்டி, பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளில், 'கோட்டா' முறை அமல்படுத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு உறுப்பினர்கள் வினியோகிக்கும் அளவை பொறுத்து, 1 கிலோ முதல், அதிகபட்சம், 10 கிலோ வரைக்கு வினியோகிக்கலாம். இதன், காரணமாக விவசாயிகள் குறிப்பிட்ட நாளில் அறுவடைக்கு தயாரான இலைகளை எடுக்க முடியாமல் போனதால், தோட்டத்தில் கரட்டு இலைகள் அதிகரித்து வருகின்றன.
கரட்டு இலையாக மாறினாலும், இறுதியில் அதே கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகிக்க எடுத்து வருவதால், வேறு வழியின்றி தொழிற்சாலை நிர்வாகமும் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், தேயிலை துாள் தரம் பாதிக்கப்படுவதுடன், சந்தையில் குறைவான விலைக்கு துாள் விற்கப்படுகிறது. இறுதியில், விலை குறைந்து விவசாயிகள் தான் பாதிக்கின்றனர். தற்போது, கோட்டா முறை தொடர்வதால் பெரும்பாலான பகுதிகளில் பல லட்சம் கிலோ கரட்டு இலையாக மாறியுள்ளது.
மேம்பாடு அவசியம்
சிறு தேயிலை விவசாய சங்க உறுப்பினர் ராமன் கூறுகையில், ''கோட்டா முறையை அமல்படுத்தினாலும், குறிப்பிட்ட சமயத்தில் இலை பறிக்காத விவசாயிகள், பல நாட்களுக்கு பிறகு அதே இலையை பறித்து கூட்டுறவு தொழிற்சாலைக்கு தான் வினியோகிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இனி வரும் காலங்களில் விவசாயிகள் வினியோகிக்கும் பசுந்தேயிலை முழுவதையும் கொள்முதல் செய்யும் அளவுக்கு முயற்சிகள் மேற்கொள்வதுடன், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை, தொழிற்சாலைகளில் மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், '' என்றார்.
கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாக குழு தலைவர் சகாதேவன் கூறுகையில்,'' மழை காலங்களில் எப்போதும் இலை விளைச்சல் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் கோட்டா முறை அமல்படுத்தப்படுகிறது. பிற நாட்களில் தொழிற்சாலைக்கு இலை வரத்து குறைவாகதான் இருக்கும். விவசாயிகள் கரட்டு இலைகளை கொண்டு வருவதால், அவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். தேயிலை துாளின் தரம் குறைந்து விடும். எனவே, கரட்டு இலைகள் கொண்டு வருவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்,'' என்றார்.''கோட்டா முறையை அமல்படுத்தினாலும், குறிப்பிட்ட சமயத்தில் இலை பறிக்காத விவசாயிகள், பல நாட்களுக்கு பிறகு அதே இலையை பறித்து கூட்டுறவு தொழிற்சாலைக்கு தான் வினியோகிக்கின்றனர்''
ராமன், தேயிலை விவசாய சங்க உறுப்பினர். '' கூட்டுறவு தொழிற்சாலை உறுப்பினர்களாக உள்ள சிறு விவசாயிகள் கரட்டு இலைகளை கொண்டு வருவதால், அவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். தேயிலை துாளின் தரம் குறைந்து விடும்''சகாதேவன், கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாக குழு தலைவர்.

மூலக்கதை