ஐடி அலுவலகத்தில் விசாரணை திவாகரன் ஆஜராகாதது ஏன்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐடி அலுவலகத்தில் விசாரணை திவாகரன் ஆஜராகாதது ஏன்?

திருச்சி: சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் வியாபார தொடர்பு உள்ளவர்களுடைய வீடுகள், அலுவலகங்கள், கம்பெனிகள் என்று 187 இடங்களில் கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சுமார் ரூ 1,500 கோடிக்கு சொத்து ஆவணங்கள், ரூ. 7 கோடி ரொக்கம், ரூ. 5 கோடிக்கு தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலா தம்பி திவாகரனின் வீடு, கல்லூரி ஆகிய இடங்களிலும் 3 நாட்கள் சோதனை நடந்தது.

இதில் 16 பண்டல்கள் மற்றும் ஒரு சூட்கேசில் அதிகாரிகள் ஆவணங்களை அள்ளிச்சென்றனர். இதனிடையே, திருச்சி கன்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று திவாகரனுக்கு வருமானவரித்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து, திவாகரன் நேற்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

திவாகரன் நேற்று மயிலாடுதுறை மயூரநாதர், பரிமள ரெங்கநாதர் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து காரில் திருவாரூர் வழியாக சுந்தரக்கோட்டையில் உள்ள வீட்டுக்கு வந்தார்.



இந்நிலையில், திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் திவாகரன் எப்போது ஆஜராவார் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. இதுபற்றி திவாகரனுக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறியதாவது: வருமான வரித்துறை சோதனையால் திவாகரன் மனதளவில் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார்.

வருமானவரித்துறை விசாரணையை எதிர்கொள்வது பற்றி தனது வக்கீல்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல் பிரபல ஜோதிடர் ஒருவரிடமும் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஜோதிடரின் ஆலோசனைப்படியே நேற்று மயிலாடுதுறை சென்று கோயில்களில் சாமி தரிசனம் செய்தார். இன்றும், நாளையும் கூட அவர் கோயில்களுக்கு செல்லலாம்.


வருமானவரித்துறையில் ஆஜராகாமல் இருக்க 3 முறை அவகாசம் கேட்கலாம். அதன்படி தான் நேற்று தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவகாசம் கேட்டு, ஆஜராகவில்லை.

இன்றும் அவர் ஆஜராக மாட்டார். வரும் திங்கட்கிழமை (20ம் தேதி) திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் திவாகரன் ஆஜராக வாய்ப்புள்ளது என்றனர்.



.

மூலக்கதை