தமிழகத்தில் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் 2 புதிய காற்றழுத்த தாழ்வுநிலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் 2 புதிய காற்றழுத்த தாழ்வுநிலை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய ஒரு மாதத்துக்குள் 25 செ. மீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 12 சதவீதம் குறைவு தான்.

இருப்பினும் இம்மாத இறுதியில் இருந்து தமிழகத்தில் மீண்டும் மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டாலும் கூட, வறட்சி ஏற்படாமல் இருக்க அதிக மழை பெய்ய வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக உள்ளது.
கடந்த மாதம் இறுதியில் தொடங்கி நவம்பர் முதல் வாரம் வரை வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது.

தென்மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பெய்தது. இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியே அந்த மழைக்கு காரணம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பின்னர், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா வழியாக ஓடிசா சென்றது.

நேற்று முன்தினம் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. தற்போது அந்த காற்றழுத்தம், தெற்கு ஒடிசா கடற்கரையில் வடமேற்கு கரையோரத்தில் நிலை கொண்டுள்ளது.

ஓடிசாவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் அது வலுவிழக்கும். இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

ஆனால் தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக மழை ஓய்ந்து வெயில் அடித்து வருகிறது. மக்கள் பார்வைக்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அளவுக்கு அதிகமான மழை பெய்ததுபோல தோன்றினாலும் கூட, நீர்நிலைகள் இன்னும் அதன் முழு கொள்ளளவை எட்டவில்லை.

இதனால் மழையின் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், வரும் 21ம் தேதி அந்தமான் அருகே மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் வரும் 27ம் தேதியும் அடுத்தடுத்து 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தத்தை பொறுத்தவரை பெரும்பாலும் அது தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை. இருப்பினும் காற்றின் சுழற்சியை பொறுத்து தென்மாவட்டங்களுக்கு மழை கொடுக்கலாம்.

அதேசமயம், தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது.

நவம்பர் இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை