ஆவடி ரயில் நிலையத்தில் மக்களை விரட்டி கடிக்கும் நாய்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆவடி ரயில் நிலையத்தில் மக்களை விரட்டி கடிக்கும் நாய்கள்

ஆவடி: ஆவடி பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, விமான படை பயிற்சி மையம், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டேங்க் பேக்டரி உள்ளிட்ட பல்வேறு ராணுவ நிறுவனங்கள், ரயில்வே பணிமனை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவடி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆவடி ரயில் நிலையம் எந்நேரமும் பரபரப்புடன் காணப்படும். மக்கள் நடமாட்டம் உள்ள இந்த ரயில் நிலையத்தில் தற்போது தெரு மற்றும் சொறி நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

இவை அங்குள்ள டிக்கெட் கவுன்டர் மற்றும் ரயில்நிலைய பிளாட்பாரங்களில் எந்நேரமும் சுற்றி வருகின்றன. ஒருசில அங்கேயே படுத்து ஓய்வெடுத்து வருகின்றன. இதனால் டிக்கெட் எடுக்க வருபவர்கள் தெரியாமல் அதன் காலை மிதித்துவிட்டால், அவைகள் ஒன்றிணைந்து மக்களை கடிக்க பாய்ந்து வருகின்றன.

இதனால் அங்கு வரும் மக்கள் அச்சமடைந்து தலைதெறிக்க ஓடிவரும் அவலநிலை நீடித்து வருகிறது.

இதேபோல் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரயில்களில் ஏறுவதற்கு மக்கள் ஓடிவரும்போது, அங்குள்ள நாய்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், பிளாட்பாரங்களில் மக்கள் இடறி விழுந்து அடிபடும் நிலையும் உள்ளது. இதுதவிர, ரயில்நிலையத்துக்கு வெளியே இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் இந்த நாய்கள் விட்டு வைப்பதில்லை.

அவர்களை துரத்தி செல்வதால், அவர்கள் பயந்து போய் முன்னே செல்லும் வாகனங்களில் மோதி அடிபடுகின்றனர். இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆவடி ரயில் நிலையத்தில் நிலவி வரும் நாய் தொல்லைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் ரயில்வே துறையின் மெத்தனப் போக்கை கண்டித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை