கனமழைக்கு கந்தலாகியுள்ள சென்னை நகர சாலைகளால்... ஆபத்து! நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி நிர்வாகங்கள், 'கொர்ர்...'

தினமலர்  தினமலர்
கனமழைக்கு கந்தலாகியுள்ள சென்னை நகர சாலைகளால்... ஆபத்து! நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி நிர்வாகங்கள், கொர்ர்...


சமீபத்திய கனமழையால், சென்னை நகரின் பெரும்பாலான சாலைகள், படுமோசமாகவும், புழுதி மண்டலமாகவும் மாறியுள்ளன.இந்த சாலைகளில், தினமும் மரண பயத்துடன் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். மழைக்கால சாலை சேதங்களை, தற்காலிகமாக சீரமைக்க, 'டெண்டர்' விட்டு தயாராக உள்ள மாநகராட்சியும், நெடுஞ்சாலை துறையும், எப்போது தான் அந்த பணிகளை செய்யுமோ? என,வாகன ஓட்டிகள் புலம்பி தவிக்கின்றனர்.சென்னையில், சமீபத்தில் பெய்த கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலை கட்டமைப்பு கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.மிக முக்கிய நெடுஞ்சாலைகளான, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை கூட, போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலையில் மாறிவிட்டன. புதிதாக அமைக்கப்பட்ட மாநகராட்சி சாலைகளும் கந்தலாகிவிட்டன.அண்ணாசாலை, முன் எப்போதும் இல்லாத விதமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசினர் தோட்டம் முதல், சைதாப்பேட்டை வரை, பல்வேறு இடங்களில் அண்ணாசாலை மிக மோசமான நிலையில் உள்ளது.எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, நந்தனம் ஆகிய இடங்களில், மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடக்கின்றன. இப்பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.சாலையில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்யும் பணிகளை, மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், மெட்ரோ ரயில் ஒப்பந்ததாரர்கள், இந்த விஷயத்தில் மிகவும் அசட்டையாக உள்ளனர்.தேனாம்பேட்டை-- நந்தனம் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடைபட்ட பகுதி, நந்தனம் - சைதாப்பேட்டை இடையிலான பகுதிகளில் அண்ணாசாலை மிக மோசமான நிலையில் உள்ளது.பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ட்ரல், ரிப்பன் மாளிகை பகுதி, எழும்பூர், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை ஆகிய பகுதிகளில், சாலைகளில் எதிர்பாராத இடங்களில், பெரிய பள்ளங்கள் உள்ளன.இதில், மெட்ரோ பணிகள் நடக்கும் ரிப்பன் மாளிகை பகுதியில், சாலைகளில் மண், ஜல்லி குவியல்கள் அதிகமாக உள்ளன. இதில் செல்லும் கனரக வாகனங்களால், சாலையே புழுதி மண்டலமாக மாறியுள்ளது.வடசென்னையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணுார் விரைவு சாலை, மணலி விரைவு சாலை, பேசின் சாலை, மாதவரம் விரைவு சாலை, பொன்னேரி விரைவு சாலை போன்றவை உள்ளன. சென்னையின் முக்கிய பகுதி கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் முக்கிய சாலைகள் இவை.கனரக வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த சாலைகளில், தண்ணீர் வெளியேற, ஆங்காங்கே பள்ளம் தோண்டினர்.அவை சரிசெய்யப்படாததால், சாலைகள் உயிர் பறிக்கும் புதைகுழிகளாக மாறிவிட்டன. தார் சாலை ஆங்காங்கே பெயர்ந்துள்ளதால் புழுதி பறக்கிறது.ஆற்காடு சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, லயோலா கல்லுாரி சுரங்கப்பாதை, கே.கே.நகர் மார்க்கெட் சாலை, கோயம்பேடு மார்க்கெட் சாலை, சர்தார் படேல் சாலை உள்ளிட்ட, பல்வேறு முக்கிய சாலைகளும் புழுதி மண்டலமாக மாறியுள்ளன.பருவமழை துவங்கும் முன்பே, தற்காலிக சாலை சீரமைப்பு பணிக்கு சென்னை மாநகராட்சி, பல கோடி ரூபாய்க்கு டெண்டர் அறிவித்தது. ஆனால், ஓர் இடங்களில் கூட சாலை சீரமைப்பு பணியை துவங்கவில்லை.தற்போது, அதிகாரிகளிடம் கேட்டால், 'டிசம்பர் முடியும் வரை, சாலை பணி எதுவும் செய்ய வேண்டாம்', என, உத்தரவு இருப்பதாக கூறுகின்றனர்.

டிசம்பர் வரை, சென்னை நகர சாலைகளில் இந்த நிலையிலேயே பயணித்தால், நிச்சயம் விபத்துகளையும், உயிர்ப்பலியையும் தடுக்க முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
முதல்வரின் துறையே இப்படியா?சென்னையில் 2015 மழைக்கு பின், சீரமைப்புக்காக ஒட்டு போடப்பட்ட இடங்களில், சாலையின் மேற்பகுதி சிதைந்து, சரளை ஜல்லி குவியலாக மாறியுள்ளன.வழக்கமாக சாலைகள் இப்படி மாறும் போது, ஊழியர்களை கொண்டு, சுத்தம் செய்வது வாடிக்கை. அதன்பின், மேற்பரப்பு நன்கு உலர்ந்த பின், தார் கலவையை பயன்படுத்தி ஒட்டு போடும் வேலை நடக்கும்.ஆனால், இந்த முறை, மழை ஓய்ந்து ஒரு வாரம் ஆகியும், சாலைகளில் பெயர்ந்த சரளை ஜல்லிகள் அகற்றப்படவில்லை. இவை சாலையில் அப்படியே குவியலாக சேர்ந்துள்ளன.இதன் மேல் செல்லும் இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. தினசரி ஐந்து பேராவது இத்தகைய விபத்துகளை சந்திக்கின்றனர்.முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறையும், பெருநகர சென்னை மாநகராட்சியும், இந்த சாலைகளை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது, அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.வாகன ஓட்டிகள்


- நமது நிருபர் குழு -

மூலக்கதை