திருவண்ணாமலை ஜிஹெச்சை ஆய்வு செய்த அமைச்சர்களை நோயாளிகள் முற்றுகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவண்ணாமலை ஜிஹெச்சை ஆய்வு செய்த அமைச்சர்களை நோயாளிகள் முற்றுகை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர்களை நோயாளிகள் திடீரென முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் டெங்கு பாதிப்பால் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக சுகாதார துறை மாநிலம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு மருத்துவமனை, பள்ளிகள், பொது இடங்களில் மாஸ் கிளினிங் பணி நடந்து வருகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணி நடவடிக்கையை அமைச்சர் மற்றும் கலெக்டர் தலைமையில் கூட்டு ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கலெக்டர்கள் தினமும் காலையிலேயே ஒவ்வொரு பகுதியாக சென்று டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியிலும், கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருந்தால் அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர். அதன்படி வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்பணி நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வந்தார்.

அப்போது அமைச்சர் சேவூர் எஸ். ராமசந்திரன், கலெக்டர் கே. எஸ். கந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாமினை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து டெங்கு புழுக்களை ஒழிக்கும் வகையில் கோயில் அருகே உள்ள சக்கரதீர்த்த குளத்தில் மீன்கள் விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளை அமைச்சர்கள் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

இதேபோல் டாக்டர்களிடமும் கேட்டனர். பின்னர் மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்துவிட்டு வெளியே வந்து காரில் ஏற முயன்றனர்.
அப்போது நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அமைச்சர்களை திடீரென முற்றுகையிட்டு காரின் முன்பு உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லை, கழிவறைகளில் தண்ணீர் இல்லை. மற்றும் வேறு எந்த அடிப்படை வசதியும் இல்லை.

சிகிச்சையும் தரமாக இல்லை. மேலும் நீங்கள் வருவதால் இன்று எல்லாம் சரியாக இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு அமைச்சர்கள், இதுபற்றி கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கும்படி கூறுகிறோம் என்று கூறியபடியே காரில் ஏறி சென்று விட்டனர்.

இச்சம்பவம் காரணமாக திருவண்ணாமலையில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை