பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் தமிழகத்தில் நிலவி வரும் டெங்கு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, ஆளுங்கட்சியில் ஏற்பட்ட பிளவு, அமைச்சரவை மாற்றங்கள், ஜெயலலிதா மர்ம மரணம் விசாரணை கமிஷன் உள்ளிட்ட விஷயங்களில் அரசியல் போக்கு மாறுப்பட்டது.

அரசியல் விமர்சகர்கள் மட்டும் இல்லாமல், அனைத்து தரப்பினரும் அடுத்து என்ன நடக்குமோ என யோசிக்க தொடங்கினர். இந்த சூழலில் தான், சட்டமன்றத்தில் திமுகவினர் குட்கா காட்டிய விவகாரம், ஆளுங்கட்சிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் சூடுபிடித்தன.

தற்போது, டிடிவி. தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் மேலும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்குககள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தமிழகத்தின் தற்காலிக கவர்னர் மாற்றப்பட்டு சமீபத்தில் நிரந்தர கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார்.



அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் ஆகிய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை பொறுத்து கவர்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.

கூட்டத்துக்கு திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி. பி. துரைசாமி, ஐ. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர். எஸ். பாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் ஜெ. அன்பழகன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, சுதர்சனம், தா. மோ. அன்பரசன், க. சுந்தர், ஆவடி நாசர், கும்மிடிப்பூண்டி வேணு உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பும், அதை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது திமுகவினர் மாவட்டம் வாரியாக முழு வீச்சில் செயல்பட்டு டெங்குவில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் நலப்பணி செய்ய வேண்டும் என ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் மு. க. ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை