நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் தமிழகத்தில் விற்பனை களைகட்டியது: பஸ், ரயில்கள் ஹவுஸ் ஃபுல்; மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது தி.நகர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் தமிழகத்தில் விற்பனை களைகட்டியது: பஸ், ரயில்கள் ஹவுஸ் ஃபுல்; மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது தி.நகர்

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.   துணிகள், இனிப்பு, பட்டாசு விற்பனை களை கட்டியது.

இதற்கிடையில், சொந்த ஊர்களுக்கு செல்ல கடைசி நேர பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பொருட்கள் வாங்க கூடிய கூட்டத்தால் தி. நகர் குலுங்கியது.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் மக்கள் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு, நேற்று(திங்கட்கிழமை) என 4 நாட்களாக சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கானோர் பஸ், ரயில்களில் முன்பதிவு தொடங்கிய அன்றே டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால் அவர்கள் பிரச்னை இல்லாமல் ஊர்களுக்கு போய் சேர்ந்து விட்டனர்.

அதன்பின் சிறப்பு ரயில், அரசு விரைவு பஸ்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. டிக்கெட் கிடைக்காதவர்கள் ஏதாவது ஒரு பஸ்சை பிடித்தோ, ரயில்களில் பொதுப்பெட்டியிலோ கூட்ட நெரிசலில் முண்டியடித்து ஏறிக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு வழக்கமாக 2275 விரைவு பஸ்களும், ஆயிரத்துக்கும் அதிகமான புறநகர் பஸ்களும் இயக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கடந்த 15ம் தேதி 788 சிறப்பு பஸ்களும், 16ம் தேதி 1844 பஸ்களும் இயக்கப்பட்டன.

இன்றும் 2188 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

மொத்தம் 4820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பஸ்களில் நேற்றிரவு கூட்டம் அலைமோதியது. இதனால், பஸ்களில் இடம் பிடிப்பதில் பலத்த போட்டி ஏற்பட்டு பயணிகள் பரிதவித்தனர்.

வழக்கமாக பகல் நேரங்களில் கோயம்பேடு பஸ் நிலையம் கூட்டம் இருக்காது. ஆனால், நாளை தீபாவளி என்பதால் பகல் பஸ்சில் இடம் கிடைத்தாலே போதும் என்று இன்று காலையிலேயே சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதும் கடந்த 15ம் தேதி 1,291 சிறப்பு பஸ்களும், 16ம் தேதி 3,865 பஸ்களும் இயக்கப்பட்டன. இன்று 5955 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மொத்தம் 11,111 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் 5 நாட்களில் மட்டும் 1,42,880 பேர் வரை முன்பதிவு செய்து இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இதனால், நேற்று இரவு கோயம்பேடு பஸ்நிலையத்தில் டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதனால், டோக்கன் பெறுவதற்கு பொதுமக்கள் போட்டி போட்டு வரிசையில் நின்றனர். பின்னர், அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பஸ்களில் ஏறி சென்றனர்.

இதே போல இன்றும் அதிகமானோர் முன்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 
இதே போல, ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மக்கள் முண்டியடித்து ஏறிச்சென்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகள் வரிசையில் நின்று அதன் பின்னரே பெட்டிகளில் ஏற்றப்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம், நேற்று சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால், இந்த ஆண்டு தீபாவளி விற்பனை மந்தமாகவே காணப்பட்டது.

இன்று மழை விட்டதால் விற்பனை சூடுபிடித்தது. சென்னையில் தி. நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் இன்று காலை முதல் மக்கள் குவிந்தனர்.   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கே கடைகள் திறக்கப்பட்டன.

தி. நகர் ரங்கநான் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார், புரசைவாக்கம், என். எஸ். சி. போஸ் சாலை மற்றும் வண்ணாரப்பேட்டை பஜார்களில் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டலாம் என்பதால் பஸ், ரயில்கள், பஜார்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகரின் முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாகன சோதனை, ஓட்டல்களில் சோதனையும் நேற்றிரவு நடத்தப்பட்டன.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுபவர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். சாதாரண உடைகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனிப்பு, பட்டாசு விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது. சென்னை தீவுத்திடல், ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானம், நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் திறக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தீபாவளியை முன்னிட்டு நாளை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றது. மொத்தத்தில் தீபாவளி கொண்டாட்டம் இன்றே களை கட்டியது.

இதே போல தீபாவளி முடிந்து, பொதுமக்கள் மீண்டும் ஊர்களுக்கு திரும்பும் வண்ணம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதாவது, பிற இடங்களில் இருந்து சென்னைக்கு 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை 3,794 சிறப்பு பஸ்களும், பிற முக்கிய பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை 7,043 பஸ்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை