தீபாவளி திருநாள் கவர்னர், முதல்வர் வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீபாவளி திருநாள் கவர்னர், முதல்வர் வாழ்த்து

சென்னை: தீபாவளி திருநாளை முன்னிட்டு கவர்னர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித்: தீபாவளி திருநாளில் தூய்மையான, வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்ற உறுதியேற்போம்.

தீபாவளி திருநாள் மக்களிடையே அன்பையும், சகோரத்துவத்தையும் வலுப்பெற செய்யட்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.



முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி: தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில்,  தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தனது கொடுஞ்செயல்களால் மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

மறம் வீழ்ந்து, அறம் வென்ற நாளாகவும், தீமைகள் அழிந்து  நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி திருநாள் விளங்குகிறது.   இந்த தித்திக்கும் தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும், இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த தீபாவளி  நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்:நாட்டில் சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம் என்று இந்த தீபாவளி நல்ல நாளில் சபதம் ஏற்போம். இந்திய திருநாட்டை பாதுகாக்கின்ற பணியில் கண்துஞ்சாது நம்மை காக்கின்ற நம் ராணுவ சகோதரர்களை நினைவில் கொண்டு  ஒளிபரப்பும் இந்நாள் முதல் தொழில் வளர வேண்டும்.

விவசாயிகள் வாழ்வில் ஒளிதீபம் ஏற்ற வேண்டும். மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிய வேண்டும்.

பாரதம் தழைக்க வேண்டும். தேன் தமிழ்போல் பாரத மக்கள் வாழ்வு இனிக்கட்டும், செழிக்கட்டும் என அன்னை ஆதிபராசக்தியை வேண்டி  அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.



ஜி. கே. வாசன்(தமாகா தலைவர்): தமிழகத்தில் நிலவும் நீண்ட காலப்பிரச்சனைகளுக்கு விரைவான நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். குறிப்பாக விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள், மாணவர்கள் ஆகியோர் பிரச்சனைகளுக்கு சுமூகத்தீர்வு காணப்பட வேண்டும்.

ஒட்டு மொத்த மக்கள் மகிழ்வோடும், இனிதோடும் வாழ வேண்டும். அதற்கு இறைவன் துணை நிற்க வேண்டும்.

இதுவே என் இனிய தமிழ் மக்களுக்கு தமாகா சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

காதர் மொகிதீன்(இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர்): இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாச்சாரங்களை கொண்ட அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும். தீபாவளியை கொண்டாடும் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



என். ஆர். தனபாலன்(பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்): தீபாவளி நன்னாளில் காரிருள் நீங்கி புத்தொளி வீசிடவும், வளம் பெருகி மகிழ்ச்சி பொங்கிடவும், மது, டெங்கு, ஒழிந்து நோயில்லா தமிழகம் காணவும், வறுமை ஒழிந்து செழுமை பெறவும் எல்லோரும், எல்லாமும் பெறவும், இல்லாமை இல்லாமல் போகவும் அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவச போக்குவரத்து, இலவச மின்சாரம் கிடைத்திடவும் இத்தீப திருநாள் வழி விடப்பட்டும்.

இதே போல, சமக தலைவர் சரத்குமார்,  அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன்,  கோகுல மக்கள் கட்சி தலைவர் எம். வி. சேகர், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம. நாராயணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் ஏ. நாராயணன் உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை