எடப்பாடி, ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி சென்றனர் : இரட்டை இலையை மீட்கும் பணிகள் தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எடப்பாடி, ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி சென்றனர் : இரட்டை இலையை மீட்கும் பணிகள் தீவிரம்

சென்னை : இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக 3 அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் டெல்லி சென்றனர். அவர்கள் இன்று மதியம் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

இதன்மூலம் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்ட எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் கடந்த மாதம் இணைந்தன.

இதையடுத்து இரட்ைட இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கடந்த 12ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.

அதில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி. வி. சண்முகம், ஆர். பி. உதயகுமார் மற்றும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே. பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.

டெல்லியில் உள்ள அதிமுக எம்பிக்கள் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகியோர் இவர்களுடன் இணைந்து, இன்று மதியம் தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர். இதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது இரண்டு அணிகளும் இணைந்ததற்காக ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர்.

மேலும் இரண்டு அணிகளும் தனித்தனியாக இரட்டை இலை சின்னத்தை மீட்க கொடுத்த ஆவணங்களையும் திரும்ப பெறுகின்றனர். அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக சசிகலா நியமனத்தை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அவர்கள் அளித்தனர்.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்படும் என்பது பற்றி வருகிற அக்டோபர் 5ம் தேதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ேநற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினருக்கும், டி. டி. வி. தினகரனுக்கும் தேர்தல் ஆணையம் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அந்த நோட்டீசில், இரட்டை இலை சின்னம் தொடர்பான தங்கள் தரப்பிலான ஆவணங்களை கூடுதலாக தாக்கல் செய்வதாக இருந்தால் வருகிற 29ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதிக்கு பிறகு அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலையும் தாக்கல் செய்யுமாறு தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி அக்டோபர் 5ம் தேதி மாலை 3 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது. அப்போது சம்பந்தப்பட்டவர்கள் தேர்தல் கமிஷன் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது அவர்களது சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி கருத்து தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையரை டெல்லியில் இன்று சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர்கள் அளிக்கும் ஆதாரங்களை ஆய்வு செய்து இரட்ைட இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அக்டோபர் 5ம் தேதிக்கு பிறகு இறுதி முடிவு செய்யும்.

இரட்டை இலை சின்னம் கிடைத்தால் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தவும் முதல்வர் எடப்பாடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை