புற்றுநோய், காசநோய் மருந்து 20% வரை விலை குறைப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம், புற்றுநோய், காசநோய் மருந்துகளின் விலையை 20 சதவீதம் வரை குறைத்துள்ளது. மருந்து விலை கொள்கையின் கீழ், அத்தியாவசிய மருந்துகள் வகைப்படுத்தப்பட்டு அவை விலை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றுக்கான விலை உச்சவரம்பை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயிக்கிறது. இதுவரை 821க்கும் மேற்பட்ட மருந்துகள் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில், 39 வகையான மருந்துகளுக்கு விலை உச்சவரம்பை இந்த ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதன்படி மஞ்சள் காமாலை, புற்றுநோய், காசநோய் சிகிச்சைக்கான மருந்துகள் விலை 20 சதவீதம் குறையும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  மருந்துகள் மட்டுமின்றி, மருத்துவ கருவிகள் விலைகளையும் இந்த ஆணையம் கட்டுப்படுத்தி வருகிறது. முதலில் ஸ்டென்ட் எனப்படும் இதய தமனியில் அடைப்பை நீக்க பொருத்தப்படும் சாதனத்தின் விலையை 80 சதவீதத்துக்கு மேல் குறைத்தது. இதை தொடர்ந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் விலையும் குறைக்கப்பட்டது.

மூலக்கதை