நிதி மோசடியை கண்டுபிடிக்க போலி நிறுவன கணக்குகளை ஆராய வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : கருப்பு பணத்தை மாற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, போலி நிறுவனங்களின் கணக்குகளை ஆராயுமாறும், இவற்றின் கணக்குகளை ஆராய்ந்து நிதி மோசடிகளை கண்டுபிடிக்குமாறும் வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பழைய ₹500, ₹1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இவற்றை வங்கிகளில் மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மட்டும், போலி நிறுவனங்கள் தங்களது 2,138 கணக்குகளில் ₹1,321 கோடியை டெபாசிட் செய்து மாற்றியுள்ளன. இதையடுத்து 2.1 லட்சம் போலி நிறுவன பதிவுகளை கம்பெனி சட்ட விதிகளின்படி மத்திய அரசு ரத்து செய்தது. இவற்றில் பெரும்பாலானவை நீண்டகாலமாக செயல்பாட்டில் இல்லாதவை. இதையடுத்து நிதி பரிவர்த்தனை முறைகேடு செய்ததாக 1,06,578 இயக்குநர்களை தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிற நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முடக்கப்பட்ட போலி நிறுவனங்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் பட்டியலை, பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டது. இதில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் பெயர்களும் இருந்தன.  இந்நிலையில், போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் இதற்கு முன்பு முறைகேடுகள் ஏதேனும் நடந்துள்ளதா என்று ஆராயுமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: போலி நிறுவனங்களின் மோசடி விவரங்களை பொருளாதார புலனாய்வு அமைப்புகள் வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளன. இந்த கணக்குகளில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதா என்று ஆராயுமாறும், சம்பந்தப்பட்ட போலி நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்துமாறும் கூறியுள்ளன. இதுதவிர, மேற்கண்ட போலி நிறுவனங்களின் இயக்குநர்கள், நிறுவனர்களின் நடவடிக்கைகளை, தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் கண்காணிக்க தொடங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம் பலன் அடைந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 55,000 இயக்குநர்கள் பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன என்றார்.வங்கிகளுக்கு ₹16,770 கோடி இழப்பு நிதி மோசடிகளால் கடந்த 2012-13 நிதியாண்டில் வங்கிகளுக்கு ₹9,750 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 2016-17 நிதியாண்டில் ₹16,770 கோடியாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதாவது, 4 ஆண்டுகளில் வங்கிகளுக்கு இழப்பு 72% அதிகரித்துள்ளது. இதையடுத்து வங்கிகளும் பெரிய அளவில் கடன் வாங்கி கடனை மோசடி செய்வதற்கு சாத்தியமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் கூடுதல் கடன் உத்தரவாதம் சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மூலக்கதை