நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை நீடிப்பு எதிரொலி : கவர்னர் தனி விமானத்தில் நாக்பூர் செல்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை நீடிப்பு எதிரொலி : கவர்னர் தனி விமானத்தில் நாக்பூர் செல்கிறார்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் விதித்துள்ள தடையை மேலும் நீட்டித்துள்ளதால், மும்பையில் இருந்து அவசரமாக சென்னை வந்த தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை தனி விமானத்தில் நாக்பூர் செல்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை 19 அதிமுக எம்எல்ஏக்கள் வாபஸ் பெறுவதாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடந்த மாதம் 22ம் தேதி கடிதம் கொடுத்தனர்.

கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக இந்த 19 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, 19 எம்எல்ஏக்களையும் நேரில் விளக்கம் அளிக்கும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதில் கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

மீதமுள்ள 18 எம்எல்ஏக்களும் நேரில் வந்து விளக்கம் அளிக்காததால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து கடந்த திங்கட்கிழமை சபாநாயகர் உத்தரவிட்டார். அதேநேரம், தமிழக சட்டப்பேரவையை கூட்டி முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசை மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து அவசரமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

தமிழகம் வருவதற்கு முன்னதாக, தமிழக கவர்னர் டெல்லி சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை செயலாளர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து பேசினார். இதனால், தமிழக கவர்னர் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவது உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்கம் செய்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதேபோன்று, திமுக சார்பில் உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் மீதும் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

பரபரப்பாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், காலியாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளில் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டதுடன், வருகிற அக்டோபர் 4ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும் நீதிபதி தடை விதித்தார். இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை அக்டோபர் 4ம் தேதி நடைபெறுகிறது.

அதன்பிறகுதான் தமிழக சட்டப்பேரவையை கூட்டுவது குறித்து தமிழக கவர்னர் முடிவு எடுக்க முடியும்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, இன்று மாலை 3. 30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் நாக்பூர் செல்கிறார்.

தொடர்ந்து சில நாட்கள் அங்கு இருந்து, மகாராஷ்டிரா மாநில கவர்னர் பொறுப்பை கவனிப்பார். பின்னர் அக்டோபர் மாதம் 4ம் தேதி நீதிமன்றத்தில் வெளியாகும் உத்தரவை பொறுத்தே தமிழக அரசு மீதான தனது மேல் நடவடிக்கைகளை கவர்னர் தொடருவார் என்று கூறப்படுகிறது.

இதனால் தமிழக அரசியலில் சில நாட்களாக நடைபெற்று வந்த அரசியல் பரபரப்பு தற்காலிகமாக 2 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

.

மூலக்கதை