திருவேற்காடு அருகே பயங்கரம் : பாஜ செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவேற்காடு அருகே பயங்கரம் : பாஜ செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பூந்தமல்லி : திருவேற்காடு அருகே பாஜ செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், வானகரம்-அம்பத்தூர் சாலையில் வசித்து வருபவர் பரமானந்தம் (48).

இவர் திருவள்ளூர் மாவட்ட பாஜ எஸ்சி பிரிவு செயலாளராக உள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

பரமானந்தம் மற்றும்குடும்பத்தினர் நேற்றிரவு வீட்டின் முன்புறஅறையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.   இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டதால்  பரமானந்தம் உள்பட அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர்.   பரமானந்தம் எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள், அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, பெட்ரோல் குண்டை வீட்டுக்குள் வீசினர். அந்த குண்டு வெடித்து சிதறியதில் ஷோபா தீப்பிடித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த  பரமானந்தம் உடனடியாக மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார்.

இதனிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்ததால் பரபரப்பு நிலவியது.   பின்னர் பொதுமக்கள் உதவியுடன்  பரமானந்தம், மர்ம நபர்களை விரட்டிச்சென்றார். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் நிறுத்தியிருந்த பைக்கில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.

பரமானந்தம் தனது வீட்டின் வெளியே மூங்கில் கொம்பில் பாஜ கொடி பறக்க விட்டிருந்தார். அந்த கொடியையும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரித்துவிட்டு சென்றுள்ளனர்.

அத்துடன் இவரது தெருவில் நடப்பட்டிருந்த பாஜ கொடி கம்பத்தையும் சாய்த்து அதிலிருந்த கொடியையும் தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து திருவேற்காடு போலீசில்  பரமானந்தம்புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். புகாரின்படி வழக்குப்பதிவு செய்து,  பரமானந்தம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? பரந்தாமனை கொலை செய்யும் நோக்கில்  குண்டு வீசினார்களா? அல்லது பாஜவில் அவரது செயல்பாடுகளை எச்சரிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்ததா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே குண்டு வீச்சு சம்பவத்தை அறிந்ததும்  பரமானந்தம் வீட்டின் முன் ஏராளமான பாஜ தொண்டர்கள் இன்று காலை குவிந்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  பரமானந்தம் கூறுகையில், ‘’சில ஆண்டுகளுக்கு முன்புதான் பாஜவில் சேர்ந்தேன்.

கட்சி வளர்ச்சியில் தீவிர பங்களிப்பை அளித்து வருகிறேன். இதற்கு முன்பும் மர்ம நபர்கள், பொது தொலைபேசி மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

தற்போது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

தமிழகத்தில் பாஜ முக்கிய பிரமுகர்கள் கொலை செய்யப்படுவதும், பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இது பாஜவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை