விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு : நாளை நடக்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு : நாளை நடக்கிறது

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநில சுயாட்சி மாநாடு நாளை ராயப்பேட்டை, ஒய். எம். சி. ஏ. மைதானத்தில் நடக்கிறது.

கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநாடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை: இந்திய ஆட்சி நிர்வாகம் இரண்டு வகையாக கட்டமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இவை மத்திய, மாநில அரசுகளாக இயங்குகின்றன. மத்திய அரசு என்பது மாநில அரசுகளின் ‘ஒன்றிய அரசாகும்’.   மத்திய, மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்களை நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறை செய்துள்ளது.

அத்துடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கலந்தாய்வு செய்து முடிவெடுப்பதற்குரிய பொதுவான அதிகாரங்களையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுத்துள்ளது. மத்திய அரசு வலிமை மிக்கதாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், மாநில அரசுகள் பலவீனமானவையாக இருப்பதும் தேசத்தின் வளர்ச்சிக்கு ஏதுவானதாக இருக்க முடியாது. மாநில அரசுகளுக்கான உரிமைகள், அதிகாரங்களை வழங்க மறுப்பதுடன், இருப்பனைவற்றையும் தட்டிப்பறிப்பதில் குறியாக இருக்கிறது.

மாநில அரசுகள் சூழல்களுக்கு ஏற்ப கொள்கை முடிவுகளை எடுக்கவோ, சட்டங்களை இயற்றவோ இயலாது.

நிதி, கல்வி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் மாநில அரசுகளுக்குள்ள குறைந்தபட்ச அதிகாரங்களையும் அண்மை காலத்தில்  மத்திய அரசு பறித்துக்கொண்டது. தற்போது, சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கும் சட்டமியற்றி மாநில அரசுகளுக்கான வரிவசூல் அதிகாரங்களை முழுமையாக பறித்துக்கொண்டது.

கல்வி தொடர்பான அதிகாரங்கள் பொதுப்பட்டியல் எனும் ஒத்திசைவு பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் அவற்றை முழுமையாக மத்திய அரசே பயன்படுத்திக்கொள்கிறது. அண்மையில், மாநில அரசுகளின் மீது திணித்துள்ள ‘ நீட்’ தேர்வு அதற்கு ஒரு சான்றாகும்.

இவ்வாறு, மாநில அரசுகளுக்குப் போதிய அதிகாரங்களை வழங்காதது மட்டுமின்றி, நடைமுறையில் உள்ள ஒருசில அதிகாரங்களையும் மையஅ ரசு பறித்து வருகிறது. இது இந்திய அரசியலமைப்பு  சட்டத்திற்கு எதிரானதாகும்.



எனவேதான், மையத்தில் உண்மையான கூட்டாட்சியை நிறுவவும் அதற்கேற்றவாறு மாநிலங்களில் சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் செப்டம்பர் 21ம் தேதி (நாளை) சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டில், திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு. க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர், கேரள முதல்வர்  பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி  திக தலைவர் வீரமணி, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன, முத்தரசன், இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் பேராசிரியர் காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநாட்டில் ஜனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

.

மூலக்கதை