காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க தமிழக உளவுத்துறை போலீசார் முயற்சி : மாலை நடைபெறும் கூட்டத்தில் விவாதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க தமிழக உளவுத்துறை போலீசார் முயற்சி : மாலை நடைபெறும் கூட்டத்தில் விவாதம்

சென்னை : தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க உளவுத்துறை போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதற்கிடையில் இன்று மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அரசு இறங்கியது. ஆனால் அவர்கள் மைசூரில் உள்ள தனியார் விடுதியில் வைக்கப்பட்டிருப்பதால் அதற்கான முயற்சி தோல்வியடைந்தது.

அங்கும் தமிழக போலீசார் சென்று எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில் பாலாஜி நேரடியாக குற்றம்சாட்டினார். இதற்கிடையில், தினகரனுக்கு ஆதரவாக இருந்து வந்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டால் எடப்பாடி அரசு வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டுள்ளனர்.

ஆனால், எடப்பாடி அணிக்கு ஆதரவான எம்எல்ஏக்களில் பலர் எங்களுடைய சிலீப்பர் செல்லாக உள்ளனர் என்று டிடிவி. தினகரன் கூறி வருகிறார்.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டால் ஒருவேளை சில எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது என்று முதல்வர் எடப்பாடி அணி கருதுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்க வேறு வழியை கையாளவும் எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளது.

எனவே, அவர்களது குறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பக்கம் திரும்பியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் உள்ள நிலையில், அதிமுக உடன் நல்ல தொடர்பு கொண்ட எம்எல்ஏக்களை வளைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கான முயற்சிகளை தமிழக உளவுத்துறை போலீசார் ரகசியமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில எம்எல்ஏக்களை உளவுத்துறை போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

திமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் சிலரை வளைத்து போடும் முயற்சியில் எடப்பாடி அரசு ஈடுபட்டு வருவது காங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று மாலை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

ஏற்கனவே, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து முடிவெடுக்கலாம் என்று திமுக முடிவு செய்துள்ளது. அதேபோன்று காங்கிரஸ் என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்து தமிழக காங்கிஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆலோசனை நடத்துகின்றனர்.

அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் இந்த ரகசிய பேச்சுவார்த்தைக்கு யாரும் உடன்பட்டு விடக்கூடாது என்பது குறித்து வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

.

மூலக்கதை