திருப்பூர் வட்டார நீர்நிலைகள் நிரம்புவதால்... மகிழ்ச்சி வெள்ளம்! - கொள்ளளவை எட்டியது மண்ணரை குளம்!

தினமலர்  தினமலர்
திருப்பூர் வட்டார நீர்நிலைகள் நிரம்புவதால்... மகிழ்ச்சி வெள்ளம்!  கொள்ளளவை எட்டியது மண்ணரை குளம்!

திருப்பூர் : திருப்பூர் பகுதியில் உள்ள, ஐந்து குளங்கள் நிரம்பிய நிலையில், நேற்று ஊத்துக்குளி ரோடு, மண்ணரை குளமும், ஆறு ஆண்டுக்கு பின், நிரம்பி வழிந்தது. இது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் தந்துள்ளது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், 34 ஏக்கர் பரப்பளவில் மண்ணரை குளம் அமைந்துள்ளது. நகருக்கு அருகே உள்ள இக்குளம், சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களுக்கு, நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாக உள்ளது.நொய்யல் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள, அணைக்காடு தடுப்பணையில் இருந்து, 4.5 கி.மீ., தூரம் உள்ள வாய்க்கால் மூலம், மண்ணரை குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.நகர பகுதியில் அமைந்துள்ளதால், வாய்க்காலின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் இருந்தன; குப்பை கொட்டப்பட்டு, வாய்க்கால் மூடியும், புதர் மண்டியும் காணப்பட்டது. இம்மாத துவக்கத்தில் பெய்த மழையின் போது, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; எனினும், மண்ணரை குளத்துக்கு போதிய அளவு தண்ணீர் செல்லவில்லை.இதையடுத்து, தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்ட, "கொங்கணர்' அமைப்பு மூலம், மண்ணரை குளத்தின் வழங்கு வாய்க்கால் தூர்வாரப்பட்டது. அதன் பலனாக, ஆறு ஆண்டுக்கு பிறகு, நேற்று அதிகாலை, 2:30க்கு, மண்ணரை குளம் நிரம்பி, உபரி நீர் வெளியேற துவங்கியது. உபரி நீர், வாய்க்கால் மூலமாக, மீண்டும் நொய்யலில் கலக்கிறது.பல ஆண்டுகளாக, நீர் வரத்தின்றி வறண்டு காணப்பட்ட இக்குளம், இதற்கு முன், 2011ல் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கின் போது நிரம்பியது. அதன்பின், தற்போது, முறையாக வாய்க்கால் அமைந்து, குளத்துக்கு மழைநீர் கொண்டு செல்லப்பட்டு, குளம் நிரம்பியுள்ளது.
நிரம்பிய குளங்கள்நொய்யல் ஆறு திருப்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்ததும், முதலாவதாக உள்ள சாமளாபுரம் குளத்தை நிரப்புகிறது. இக்குளம், கடந்த வாரம் நிரம்பி, பள்ளப்பாளையம் குளத்துக்கு தண்ணீர் வந்தது; அந்த குளமும், ஓரிரு நாளில் நிரம்பியது. தொடர்ந்து, செம்மாண்டம்பாளையம் குளம், ஆண்டிபாளையம் குளம் ஆகியன, அடுத்தடுத்து முழு கொள்ளளவை எட்டின; உபரி நீர் வெளியேறி வருகிறது. அவ்வரிசையில், நேற்று மண்ணரை குளமும் நிரம்பி வழிந்தது. மேலும், செங்கரை பள்ளம் ஓடை மூலம் நீர் வரத்து பெறும் வேட்டுவபாளையம் குளமும், பல, ஆண்டுக்கு பிறகு, இம்மாத துவக்கத்தில் நிரம்பியது. நொய்யல் ஆற்றில், காசிபாளையம் தடுப்பணையில் இருந்து நீர் வரத்து பெறும், 140 ஏக்கர் பரப்பளவுள்ள, மாணிக்காபுரம் குளமும், வேகமாக நிரம்பி வருகிறது. நூறு ஏக்கர் பரப்பளவில், மையப்பகுதியில், 50 அடி ஆழம் வரை நீர் தேங்கியுள்ளது.குளத்தின் மடை அருகே, நீர் மட்டத்தை அளவிடும், கல் தூண் "தூம்பு' பாதியளவு மூழ்கியுள்ளது. இது, விவசாயிகளுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

மூலக்கதை