பேரவலமாய் கிடக்கிறது கோவை அரசு மருத்துவமனை... ஜி.எச்., கொசு தொழிற்சாலை! தீர்வை நாடி வந்த நோயாளிகளுக்கு தொடருது தீராத வேதனை!

தினமலர்  தினமலர்
பேரவலமாய் கிடக்கிறது கோவை அரசு மருத்துவமனை... ஜி.எச்., கொசு தொழிற்சாலை! தீர்வை நாடி வந்த நோயாளிகளுக்கு தொடருது தீராத வேதனை!

நோய்களைத் தீர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பிலுள்ள கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், துப்புரவுப் பணி, கண் துடைப்பாக நடப்பதால், வைரஸ், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு உற்பத்தி மையமாக மாறி வருகிறது: இதனால், நோய்க்கு தீர்வு காண்பதற்கு வரும் நோயாளிகள், கூடுதல் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த நவீன மருத்துவ சேவையை, இலவசமாக வழங்கி, மனித சேவையில் மகத்தான பங்களிப்பை அளித்து வருகின்றன, அரசு மருத்துவமனைகள். அந்த வகையில், கோவை மாவட்டத்திலுள்ள ஏழைகளுக்கு மட்டுமின்றி, திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள பல லட்சம் ஏழை மக்களுக்கு, அரிய மருத்துவ சேவையை வழங்கி வருகிறது, கோவை அரசு மருத்துவமனை.கட்டடம் தான் பெருசு...!தினமும் பல ஆயிரம் வெளி நோயாளிகளையும், உள் நோயாளிகளையும் கவனித்து வரும் இந்த மருத்துவமனையின் தேவையை உணர்ந்தே, பல கோடி ரூபாய் செலவழித்து, பிரமாண்டமான கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு புதிய பிரிவுகளையும் துவக்க அனுமதித்து, ஏராளமான உபகரணங்களையும் வழங்கியுள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த மருத்துவ மனையைக் கொண்டு ஏழைகளுக்கு கூடுதல் சேவை செய்ய வேண்டிய பொறுப்பு, மருத்துவமனை நிர்வாகத்துக்கு உள்ளது.ஆனால், சமீபகாலமாக இந்த மருத்துவமனை குறித்த புகார்கள் வலுத்து வருகின்றன. காலதாமதமான சிகிச்சை, எதிலும் மெத்தனம், லஞ்சம் என, புகார்கள் குவிவது, அரசின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவுள்ளது. மருத்துவமனையின் பராமரிப்பும், பாதுகாப்பும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. வளாகத்தில் வாகன திருட்டு, பொருட்கள் திருட்டு, சர்வ சாதாரணமாகி விட்டது. இதனால், நோயாளிகள் பெரும் அச்சத்தோடு உலவ வேண்டியுள்ளது.இவை எல்லாவற்றையும் விட, மருத்துவமனை வளாகத்தில் நிலவும் சுகாதாரக்கேடு, நோயாளிகளுக்கு வேதனையுடன் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மருத்துவமனையில், 'துாய்மை சேவை' இயக்கத்தின் கீழ், 'மாஸ் கிளீனிங்' நடந்து வரும் நிலையில் சுகாதாரக்கேடு குறித்த புகார்களுக்கு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதல்லை. மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளிலும், சமீபத்தில் பெய்த மழைநீர், தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.பகலிலேயே படையெடுப்பு!இந்த மழை நீர் தேக்கத்தில், டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள், லட்சக்கணக்கில் உருவாகி வருவதை கண் கூடாகப் பார்க்க முடிகிறது. அப்படியெனில், 'மாஸ் கிளீனிங்' என்பது கண் துடைப்பு நடவடிக்கை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பகல் நேரத்திலேயே, கொசுக்களின் படையெடுப்பு அதிகரித்து, நோயாளிகளையும், அவர்களுக்குத் துணையாக வந்துள்ள பிறரையும் வாட்டி வதைக்கிறது.இந்த கொசுக்கள் கடித்தால், டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பாதிப்பு நிச்சயம் என்பது தெரிந்திருந்தும் மருத்துவமனை நிர்வாகம் இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குமுறுகின்றனர்.

தேங்கியுள்ள தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்றவும், கொசு மருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றனர். இது, நோயின் வலியில் உள்ள ஏழைகளின் வேண்டுதல்; இதை உடனே நிறைவேற்றுவதே, நல்ல நிர்வாகத்துக்கான ஒரே அடையாளம்.
தொடர் மழையால் இடர்!கோவை அரசு மருத்துவமனை 'டீன்' அசோகனிடம் கேட்டதற்கு, ''மருத்துவமனையின் அனைத்து பகுதிகளிலும் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைவிடாது மழை பெய்வதால், தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. ''அனைத்துப்பகுதிகளிலும் ஒரே நேரத்தில், கொசு ஒழிப்பு பணியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அவை துாய்மைப்படுத்தப்படுகின்றன. ''மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவினர், இதற்காக தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். விரைவில் அனைத்து இடங்களும் துாய்மை அடைந்து விடும்,'' என்றார். நடந்தால் மகிழ்ச்சி!

-நமது நிருபர்-

மூலக்கதை