வெண்டைக்கு கட்டுப்படியான விலை இல்லாததால் விவசாயிகள் கவலை :பறிக்காமல் செடிகளிலேயே விட்டனர்

தினமலர்  தினமலர்

போடி;போடியில் வெண்டை விளைச்சல் அதிகரித்தும் கட்டுப்படியான விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பலர் வெண்டையை பறிக்காமல் செடிகளிலே காயவிட்டுள்ளனர்.போடி அருகே காமராஜபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி, டொம்புச்சேரி, சிலமலை, ராசிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜூலை முதல் செப்டம்பர் வரை சீசனாகும். மற்ற மாதங்களில் சில விவசாயிகள் மட்டும் பயிரிட்டு வருகின்றனர்.
நடவு செய்த 45 முதல் 55 நாட்களில் நன்கு விளைந்த நிலையில் வெண்டை பறித்தால் பலன் கிடைக்கும். கடந்த ஆண்டு வெண்டை விளைச்சல் அதிகரித்த நிலையில் கிலோ ரூ.20 முதல் 25 வரை நல்ல விலை இருந்தது.தற்போது காமராஜபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வெண்டை கிலோ ரூ.15 க்கு விற்பனையானது. தற்போது அதிக வரத்தால் விலை குறைந்து விவசாயிகளிடம், வியாபாரிகள் கிலோ ரூ. 6 முதல் ரூ.8 வரை வாங்குகின்றனர். சில்லரையில் வியாபாரிகள் கிலோ ரூ. 20 வரை விற்பனை செய்கின்ற னர். மருந்தடிப்பு, எடுப்புகூலி உள்ளிட்ட செலவுகளுக்கு கூட இந்த விலை கட்டுபடியாகாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள பலர் வெண்டையை செடிகளில் பறிக்காமல் அப்படியே காய விட்டுள்ளனர். --

மூலக்கதை