மெட்ரோவுடன் மேம்பால ரயில் ஒருங்கிணைப்பு பேச்சு துவக்கம்!ஆவணங்களை அளிக்க சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவு

தினமலர்  தினமலர்
மெட்ரோவுடன் மேம்பால ரயில் ஒருங்கிணைப்பு பேச்சு துவக்கம்!ஆவணங்களை அளிக்க சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவு

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துடன், மேம்பால ரயில் போக்குவரத்தை ஒருங்கிணைப்பதற்காக, அதிகாரிகள் நிலையிலான, அதிகாரபூர்வ பேச்சு துவங்கியுள்ளது. இதற்காக மேம்பால ரயில் திட்ட ஆவணங்களை ஒப்படைக்க, பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில், முதல்கட்டமாக, 42 கி.மீ., தொலைவுக்கு, மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. இதில் விமான நிலையம் முதல், சின்னமலை வரையும், பரங்கிமலை முதல் நேரு பூங்கா வரையிலான வழித்தடங்களில், போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கடற்கரை ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரை மேம்பால ரயில் திட்டத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது.
மெட்ரோ ரயில் திட்டத்தை நிர்வகித்து வரும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை, இதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ரயில்வே வாரியத்தின் கருத்து கேட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் மேம்பால ரயில் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான அதிகாரிகள் கூட்டம், அண்மையில் சென்னையில் நடந்தது.இதில் மெட்ரோ ரயில், போக்குவரத்து துறை, சி.எம்.டி.ஏ., தெற்கு ரயில்வே ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுடன், இரண்டு தனியார் கலந்தாலோசனை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மெட்ரோ ரயில் நிறுவனத்துடன், எம்.ஆர்.டி.எஸ்., எனப்படும் மேம்பால ரயில் திட்டத்தை ஒருங்கிணைப்பது குறித்து, முதல் முறையாக அதிகாரபூர்வ பேச்சு துவக்கப்பட்டுள்ளன. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, கலந்தாலோசனை நிறுவனங்களின் பிரதிநிதிகள் விளக்கினர்.மேம்பால ரயில் திட்டத்தை பயன்படுத்தும் பயணியர் எண்ணிக்கை குறித்தும், இந்த ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்த விபரங்களை அளிக்குமாறு, ரயிவே துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.மேம்பால ரயில் திட்டம் தொடர்பான அரசாணைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அளிக்குமாறு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. வீட்டுவசதி துறை, வருவாய் துறையினரிடமும், ஆவணங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், எந்தெந்த ரயில் நிலையங்களில், எந்த பகுதி இருப்பு பாதையை, ரயில்வே வைத்துக்கொள்வது, எதை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒப்படைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடற்கரை ரயில் நிலையத்தை அழகுபடுத்துவதற்கான வரைவு திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த முடிவுகள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக அடுத்த கூட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேம்பால ரயில் கடந்து வந்த பாதை...முதல்கட்டம் கடந்த, 1984ல், கடற்கரை - மயிலாப்பூர், மேம்பால ரயில் திட்ட பணிகள் துவக்கம் நீளம்: 8.55 கி.மீ., நிலையங்கள்: எட்டு இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து, 1998ல் துவக்கம் 100 சதவீத நிதி மத்திய அரசு வழங்கியது.
இரண்டாம் கட்டம் கடந்த, 1998ல், மயிலாப்பூர் - வேளச்சேரி இரண்டாம் கட்டப்பணிகள் துவக்கம் நீளம்: 11 கி.மீ., நிலையங்கள்: ஒன்பது ரயில் போக்குவரத்து, 2007ல் துவக்கம் இரண்டாம் கட்ட திட்ட பணிக்கான நிதியில் தமிழக அரசின் பங்கு, 67 சதவீதம்; மத்திய அரசு பங்கு, 33 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பு.
இரண்டாம் கட்டம் விரிவாக்கம் கடந்த, 2007ல், வேளச்சேரி - பரங்கிமலை, இரண்டாம் கட்ட விரிவாக்க திட்ட பணிகள் துவக்கம் நீளம் : 5 கி.மீ., நிலையங்கள்: மூன்று திட்ட செலவில், மூன்றில் இரண்டு பங்கு தமிழக அரசும்; மூன்றில் ஒரு பங்கை, மத்திய அரசும் ஏற்றுள்ளது நிலம் கையகப்படுத்துதல் வழக்குகளால் இறுதி கட்ட பணிகள் தொய்வடைந்துள்ளன.


- நமது நிருபர் -

மூலக்கதை